அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் புழுதிபறக்க நின்று ஆடிய செல்லியம்மன் கோவில் காளை இணையதளத்தையும் கலக்கி வருகிறது..!

Read Time:6 Minute, 7 Second

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் புழுதிபறக்க நின்று ஆடிய செல்லியம்மன் கோவில் காளை இணையதளத்தையும் கலக்கி வருகிறது.

மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  17 தேதி நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.  போட்டியின் சிறந்த வீரராக 15 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் தேர்வு செய்யப்பட்டு பரிசாக கார் வழங்கப்பட்டது.  காளைகளில் பரம்புப்பட்டி செல்லியம்மன் கோவில் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக வழங்கப்பட்டது.

அலங்காநல்லூரில் களத்தில் தொட்டுப்பார்…! என்ற கோஷம் முழங்க களத்திற்கு கம்பீரமாக வெற்றிநடை போட்ட பரம்புப்பட்டி செல்லியம்மன் கோவில் காளையின் ஆட்டம் இணையதளத்திலும் வைரலாகி வருகிறது.

ஒருநிமிட வீடியோ பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என அனைத்து இணைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

வீரர்களையும், பார்வையாளர்களையும் பார்த்து மிரண்டு ஓடாமல் வந்துபார் என்றே வாடிவாசல் வழியாக வரும் காளை ஆவேசம் காட்டுகிறது. வெளியே வந்ததும் அங்கு ஓடிய ஒழிந்த வீரர்களை பார்வையின் மூலம் மிரட்டியது. வேகமாக சென்று அங்கு ஒழிந்து இருந்த வீரர் ஒருவரை பந்தாடியது. களத்தில் புழுதிபறக்க ஆடிய காளை, அவரை தொடர்ந்து விடாமல் புரட்டியெடுக்கிறது. அப்போது காளையின் கவனத்தை திசைத்திருப்ப மற்ற வீரர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய கோஷம் கண்டும் அஞ்சாத காளை மிரட்டுகிறது. அப்போது வாடிவாசலுக்கு செல்லும் வீரர் ஒருவரை பின்தொடர்ந்து தாக்குகிறது. பின்னர் வெளியே வந்ததும் எல்லா வீரர்களையும் தெரிக்கவிட்டது.

களத்தை விட்டு வெளியே செல்வது போல் சென்ற காளை மீண்டும் உள்ளே வந்து வா பார்க்கலாம்… என்று களத்தை ஒருசுற்று சுற்றி எல்லா வீரர்களையும் மிரட்டி வெளியே சென்றது. காளையில் ஆவேச ஆட்டம் மைதானத்தில் அணல்பறக்க செய்தது.  அனைத்து வீரர்களையும் புறமுதுகு காட்டி ஓட வைத்த காளை இப்போது இணையதளத்திலும் வைரலாகி வருகிறது. பலரும் காளையை பாராட்டி வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

கோவில் காளை…

பரம்புப்பட்டி செல்லியம்மன் கோவிலில் யாரோ கன்றுலே இந்த காளையை எங்க கோயிலில் விட்டுட்டுப் போயிட்டாங்க. அதனால், அந்த அம்மன் பெயரிலேயே காளையை வளர்க்கிறோம் என்கிறார்கள் கிராம இளைஞர்கள். இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் இருந்த ஆர்வம் காரணமாக காளையை கன்றில் இருந்தே அதற்கு என்று தயார் படுத்தி வந்துள்ளனர். அதற்கான பயிற்சியையும் தீவிரமாக கொடுத்துவந்துள்ளனர். அவர்களுடைய முயற்சி, இப்போது உலகம் முழுவதும் அவர்களுடைய ஊரை அறியச் செய்துள்ளது.

இளைஞர்கள் காளையை ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்தும் முயற்சி எளிதாக முடியவில்லை. அவர்களுக்கு ஊர் பெரியவர்கள் முதலில் அனுமதியை கொடுக்கவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னதாக காளை தோல்வியை தழுவிய போது இளைஞர்களை எல்லோரும் கேலி செய்துள்ளனர். இப்போது ஊருக்கே பெயர் வாங்கி கொடுத்துள்ளது.

காளைக்கு பயிற்சி கொடுத்த இளைஞர்கள் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்துள்ள பேட்டியில், “எங்கள் கோவில் தெய்வத்தின் பெயரை வைத்து காளையை நாங்கள் வளர்த்து வருகிறோம்.  தோல்வியடைந்த பின்னர் நாங்கள் காளையை விளையாட்டுக்கு ஒருவருடம் அழைத்து செல்லவில்லை. ஆனால் வார இறுதிநாட்களில் பயிற்சியளித்தோம். 2017-ல் பதிவு செய்த போது எங்களுடைய முயற்சிக்கு மதிப்பு கிடைத்தது. அதற்கு பின்னதாக செல்லியம்மன் தோல்வியை சந்திக்கவில்லை. வாடிவாசல் போன்ற கட்டமைப்பை ஏற்படுத்தி நாங்கள் பயிற்சியை வழங்கினோம். திமிலை பிடிப்பதை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதையும் காளைக்கு பயிற்சியாக வழங்கினோம். குறைந்த நாட்களிலே மைதானத்தில் தன்னை எப்படி பார்த்துகொள்வது என்பதை கற்றுக்கொண்டது. அப்போது காளை தனக்கென்று சொந்த விளையாட்டை விளையாடுகிறது,” என்று கூறியுள்ளனர்.

எங்களுடைய காளை 15-க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களில் வெற்றியைபெற்றுள்ளது. இருப்பினும் முதல் முறையாக அலங்காநல்லூரில் விருதை வென்றுள்ளது என்கிறார்கள் இளைஞர்கள். எப்போது எல்லாம் ஜல்லிக்கட்டு நடக்கிறதோ, அப்போது எல்லாம் எங்களுடைய கோவில் பெயரில் பதிவு செய்வோம். இப்போது எங்கள் ஊருக்கு பெரும் பெருமையை வாங்கி கொடுத்துள்ளது என கிராம மக்கள் மகிழ்ச்சியை பதிவு செய்கிறார்கள். காளை மேலும், மேலும் அதிகமான வெற்றியை தனதாக்க வாழ்த்துக்கள்..