2019 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பிரதமர் மோடி சொல்வது என்ன?

Read Time:2 Minute, 36 Second

மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் ஒன்று சேர்ந்துள்ள மெகா கூட்டணி அமைக்கிறார்கள் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் பா.ஜனதா அரசையும், பிரதமர் மோடியையும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதற்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி, மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் ஒன்று சேர்ந்துள்ள மெகா கூட்டணி அமைக்கிறார்கள் என்றார்.

தாத்ரா-நாகர் ஹவேலியில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி பேசுகையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி எனக்கெதிராக மட்டும் ஒன்று திரளவில்லை. அந்தக் கூட்டணி நாட்டு மக்களுக்கும் எதிரானது. எதிர்க்கட்சிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள எத்தனை பெரிய கூட்டணிகள் வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால், அவர்களால் மக்களின் மனங்களை வெல்ல இயலாது.

பொது மக்களின் பணத்தை சிலர் கொள்ளையடிப்பதை நான் தடுத்து நிறுத்தினேன். ஊழலுக்கு எதிராக நான் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அவர்கள் கோபமடைந்துள்ளனர். அந்த நபர்களே தற்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குகின்றனர். அந்தக் கூட்டணியில் இணையும் அனைவரும், அச்சத்தின் காரணமாகவே ஒன்றிணைந்துள்ளனர். ஆனால் அவர்களால் கர்ம வினையிலிருந்து தப்ப இயலாது.

தற்போது எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ஒன்று திரளும் கட்சிகள் யாவும் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியையே விமர்சித்தன. ஆனால் தற்போது தங்களது வாய்ப்புகளுக்காக அவை அந்தக் கட்சியுடனே சேருகின்றன. ஒரு கட்சியின் 60 ஆண்டுகால ஆட்சியில் பெரிதாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் திட்டங்களுக்கு அதன் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டன. கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவந்தும், எந்தத் திட்டத்துக்கும் எனது பெயர் வைக்கப்படவில்லை என்றார்.