கஷ்டங்களை நீக்கி அருள்புரிவான் கந்தகோட்ட முருகன்…

Read Time:9 Minute, 20 Second

தமிழகத்தில் குன்று இருக்கும் இடமெல்லாம், குமரன் இருக்கும் இடமென முருகனுக்குத் தனிக் கோயில்கள் ஏராளம் இருக்கு. ஆனால் முருகன் சென்னையில் மிகவும் நெருக்கடி மிகுந்த இடத்தில் விருப்பத்துடன் அமர்ந்து அருள் பாலித்து வருகிறார். பாரிமுனை ராசப்ப செட்டி தெருவில் கந்தக்கோட்டம் என்று அழைக்கப்படும் கந்தசுவாமி கோயில்தான் முருகன் விரும்பி இருந்த இடம்.

கந்தசுவாமி கோயில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பகுதியில் வசித்த சிவாச்சாரியார் திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு சில ஆச்சார்யார்களுடன் ஊருக்கு திரும்பிய போது, வழியில் பலத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே, வழியில் ஓர் மடத்தில் தங்கினர். அன்றிரவு சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறினாராம். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன், சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அந்த சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார்.

வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. சுவாமி இந்த இடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் என்கிறார்கள்.

மற்றொரு வரலாறு

இதேபோன்று கோயிலுக்கு மற்றொரு வலராறு கூறப்படுகிறது. தீவிர முருக பக்தரான வேலூர் மாரி செட்டியார் திருப்போரூரில் உள்ள முருகனை அடிக்கடி சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கிருத்திகை நாளில் கண்டிப்பாக திருப்போரூரில் இருப்பாராம். ஒருமுறை அவர் தன்னுடைய நண்பர் கந்தப்பா ஆசாரியுடன் திருப்போரூர் சென்றுவிட்டு ஒரு இடத்தில் ஓய்வெடுத்தாராம். அப்போது அவருக்கு தெய்வத்தின் அருள் வாக்கு கிடைத்தது. அதாவது, அங்கிருந்த வேப்ப மரத்தின் அடியில் இருந்த புற்றுக்குள் இருப்பதாக அருள் வாக்கு கிடைத்தது. இதனையடுத்து அங்கிருந்து அவருக்கு ஒரு முருகன் சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் அந்த சிலையை எடுத்துவந்து ஏற்கனவே முத்தையால்பேட்டையில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தனர்.

சிலையை வைப்பதற்காக மாரி செட்டியார் ஒரு சிறிய கோயிலைக் கட்டினார். இதற்காக அவர் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் 1673-ம் ஆண்டு நடைபெற்றதாக ஆங்கிலேயே குறிப்புகளில் காணப்படுகிறது.

தல சிறப்பு:-

மூலவர்:- கந்தசுவாமி (வள்ளி, தெய்வானை)
உற்சவர்:- முத்துக்குமார சுவாமி
தல விருட்சம்:- மகிழம்

கோயிலில் மூலவருக்கு நேரே வாயில் கிடையாது. மூலவருக்கும், கொடிமரத்திற்கும் இடையில் துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. வடக்குப்பகுதியில் 5 நிலைகள் கொண்ட ராஜ கோபுரம், பிரதான வாயில் இருக்கிறது.


கோயிலுக்குள் விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சண்முகருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.


இங்கு உற்சவர் முத்துக்குமார சுவாமி தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது.


8 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த கோயிலில் சரவண பொய்கை என்ற பெயரில் ஒரு அழகிய குளம் இருக்கிறது.


குளக்கரையில் விநாயகர் சித்தி, புத்தியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். காசி விஸ்வநாதர், அம்பாள் விசாலாட்சி சன்னதியும் உள்ளது.


சரவண பொய்கையின் கரையில் உள்ள விநாயகரின் வலதுபுறத்தில் லட்சுமி தேவியும், இடதுபுறத்தில் சரஸ்தேவியும் உள்ளனர்.

பாடல்பெற்ற தளம்

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் முருகனைத் தரிசிக்க கோயிலிலேயே தங்கிவிடுவாராம். மன முருகிப் பாடலும் பாடுவார். திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள ‘ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்ற பாடலில் கந்த கோட்ட முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார் வள்ளலார்.

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!

‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே’ என்று கந்த கோட்டத்து முருகனை புகழ்ந்து பாமாலை சூட்டியுள்ளார்.

வள்ளலாரைப் போன்றே சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் போன்றோரும் இங்கு வந்து பாடியுள்ளனர்.

விழாக்கள்:-

கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போன்றவையும் இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாகக் காட்சி அளிப்பது, கார்த்திகை பெண்கள் ஒவ்வொரு குழந்தையையும் எடுக்கும் வைபோகமும் நடக்கிறது.

”அறு முக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின்
வெறி கமழ் கமலப் போதில் வீற்றிருந்தருளினானே” -கந்தபுராணம்.

”ஞாலமேத்தி வழிபடும் ஆறு பேர்க்கு மகாவன
நாணல் பூத்த படுகையில் வருவோனே” – திருப்புகழ்.

என்றெல்லாம் முருகப் பெருமான் புகழ் பரவும் புனித நூல்களில் பேசப்படுகின்றன. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் கோயிலில் கூட்டம் அதிகமாக உள்ளது. பல்வேறு பிரச்சனைகளில் தீர்வுகாண பக்தர்கள் முருகனை வந்து வணங்கி அருள் பெற்று செல்கிறார்கள். தங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் போது நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தோல் நோய் மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சரவணப் பொய்கையில் வெல்லம் கரைக்கின்றனர்.

குளத்தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் குளக்கரையில் லட்சுமி, சரஸ்வதியுடன் உள்ள விநாயகரை வணங்கினால் கல்வி சிறக்கும், செல்வம் பெருகும், ஞானம் கிடைக்கும் என்கின்றனர்.

சென்னையின் மையப்பகுதியில் பாரிமுனையில்(பாய்கடை பஸ் நிறுத்தம்) கோயில் அமைந்துள்ளதால் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்லாம். துன்பங்களையெல்லாம் நீக்கும் சக்தியாக விழங்கு கந்தகோட்ட முருகன், கஷ்டங்களை நீக்கி அருள்புரிவான். சென்று வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *