இனி புதிய இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது; நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை

Read Time:3 Minute, 49 Second

2020-ல் இருந்து புதிய இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் மிகக் குறைந்த ( 30 சதவீதத்துக்கும் குறைவான) மாணவர் சேர்க்கைக் கொண்ட 800 இன்ஜினீயரிங் கல்லூரிகளை 2018-ம் ஆண்டில் மூடிவிடும்படி அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் 2017-ம் ஆண்டு கேட்டுக் கொண்டது.

5 ஆண்டுகளில் 30 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் சேர்க்கை நடைபெற்றஇன்ஜினீயரிங் கல்லூரிகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் மூடிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள இன்ஜினீயரிங் கல்லூரிகள் குறித்த பட்டியல் பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படவில்லை. நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளின் தேவை குறைந்ததாலும், கல்வித்தரம் குறைந்து விட்டதாலும், கல்லூரிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, ஏஐசிடிஇ தீவிரமாக செயல்பட்டு வருகிறது என அப்போது செய்தி வெளியாகியது.

அனுமதி கிடையாது

இந்நிலையில் 2020-ல் இருந்து புதிய இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்களின் திறனைப் பொறுத்து கூடுதல் இடங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐஐடி-ஐதராபாத் தலைவரான பி.வி. ஆர்.மோகன் ரெட்டி தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏஐசிடிஐ ஏற்றுக்கொண்டது.

மெக்கானிக்கல், எலக்டிர்க்கல், சிவில் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு கூடுதல் இடங்களை அனுமதிக்க முடியா. தற்போதுள்ள கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை அங்கீகரிப்பதற்கு அந்த நிறுவனத்தின் திறனை பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் மட்டுமே AICTE அங்கீகாரங்களை வழங்க வேண்டும். ரோபாட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், தரவு அறிவியல், சைபர்கிரைம் பாதுகாப்பு மற்றும் 3D பிரிண்டிங் – டிசைனிங் பிரிவுகளில் புதிய UG இன்ஜினீயரிங் படிப்பை கொண்டுவரவேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

நாட்டிலுள்ள 3,291 இன்ஜினீயரிங் கல்லூரிகளில் 2016-17-ல் 51 சதவித இடங்களுக்கு மாணவர்கள் சேரவில்லை. விசாரணையின்போது விதிமுறைகளில் வெளிப்படையான இடைவெளி இருந்தது, மோசமான உள்கட்டமைப்பு, ஊழல்கள், மோசமான ஆய்வகங்கள், தரமற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட குறைபாடுகள் காணப்பட்டது. இவை பட்டதாரிகளின் குறைந்த வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்கிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.