2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கரீனா போட்டி?

Read Time:5 Minute, 19 Second

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கரீனா கபூரை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில் சினிமா நட்சத்திரங்களில் யார் யாரெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய உள்ளனர், தேர்தலில் போட்டியிட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பா.ஜனதா தரப்பில் மாதுரி தீட்சித், கவுதம் கம்பீர், சன்னி தியோல், அஜய் தேவ்கன், கபில் தேவ், அக்ஷய் குமார், அனுபம் கெர் உள்ளிட்டோர் போட்டியிடலாம் என பட்டியல் நீண்டு செல்லும் நிலையில், காங்கிரஸ் சார்பில் கரீனா பதிலடி கொடுப்பாரா? என்பதை பார்க்கலாம்.

மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றது. இப்போது காங்கிரஸ் தலைவர்கள் மாநிலத்தில் இந்தி நடிகை கரீனா கபூரை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். போபால் மக்களவைத் தொகுதியில் கரீனா கபூரை போட்டியிட செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கோரிக்கை எழுவதற்கு காரணம் என்ன?

கரீனா கபூர் இந்தி நடிகர் ஷயிப் அலிகானை திருமணம் செய்துள்ளார். அவருடைய மாமனார் மன்சூர் அலிகான் பட்டோடி போபாலில் பிறந்தவர். போபாலை இறுதியாக ஆட்சி செய்த நவாப் குடும்பத்தினர். பட்டோடி குடும்பத்தாருக்கு போபால் நகருடன் ஒரு வலுவான உறவு உள்ளது. கரீனா கபூர், ஷயிப் அலிகான், ஷர்மிளா தாகூர், சோஹா அலிஹான் ஆகியோர் அடிக்கடி போபால் நகருக்கு சென்று வருபவர்கள். இப்போது கரீனா கபூரை களமிறக்குவதன் மூலம் எளிதாக வெற்றி பெறலாம் என காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள். 1984-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் போபால் தொகுதியில் காங்கிரஸ் கட்சியால் வெற்றியை ருசிக்க முடியவில்லை.

1991-ம் ஆண்டு மன்சூர் அலிகான் பட்டோடி போட்டியிட்டபோது பா.ஜனதா வேட்பாளர் சுஷில் சந்திரா வர்மாவிடம் தோல்வியை தழுவினார். இப்போது அவருடைய மருமகளை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் சொல்வது என்ன?

காங்கிரஸ் தலைவர்கள் கவுடு சவுகான், அனீஸ் கான் பேசுகையில், போபால் தொகுதியில் ஸ்திரமாக காலூன்றியுள்ள பா.ஜனதாவை தோற்கடிக்க கருவியாக இந்நகர்வை முன்னெடுக்கலாம். கரீனா கபூருக்கு இளம் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் கரீனாவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் என்று கூறுகிறார்கள்.

பா.ஜனதா விமர்சனம்

கரீனா கபூரை தேர்தலில் போட்டியிட செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கையை பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது. உள்ளூரில் ஆள் கிடைக்காத காரணத்தினால் மும்பையில் இருந்து வேட்பாளரை காங்கிரஸ் களமிறக்குகிறது என விமர்சனம் செய்துள்ளது.

போபால் தொகுதியின் இப்போதைய எம்.பி.யாக உள்ள பா.ஜனதா எம்.பி. அலோக் சன்ஜார் பேசுகையில், காங்கிரஸிடம் வலுவான வேட்பாளர் கிடையாது. எனவே, சினிமா நட்சத்திரத்தை களமிறக்க முயற்சி செய்கிறது என கூறியுள்ளார். 2019 தேர்தலிலும் பா.ஜனதாவே வெற்றிப்பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

போட்டியிடுவாரா?

இதற்கிடையே திரையுலகில் தனக்கான இடத்தில் ஸ்திரமாக இருக்கும் கரீனா கபூர் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுகிறது. அவருடைய ரசிகர்களும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள். ஆனால், 2019 தேர்தலில் கரீனா கபூரை போட்டியிட செய்ய அவருடைய குடும்பத்தாரை சம்மதம் தெரிவிக்க செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முயற்சி செய்வாரா? என்ற கேள்வியும் தொடர்கிறது. தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கரீனா கபூர் தரப்பிலோ, மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் தரப்பிலோ எந்தஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. கரீனா இந்த தகவலை நிராகரித்துவிட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கரீனா போட்டியிடுகிறாரோ? இல்லையோ? 2019 தேர்தலில் அதிகமான சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்கள் களமிறக்கப்படலாம் என்றே தெரிகிறது.