2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி… தேர்தல் ஆணையம் மறுப்பு

Read Time:4 Minute, 57 Second

இந்தியாவில் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுகிறது என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டிவருவது தொடர் கதையாக இருக்கிறது. பா.ஜனதாவும் எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில் இதே குற்றச்சாட்டை முன்வைத்தது. மோசடி செய்ய முடியுமா? என்பதை செயல்படுத்திக் காட்டுங்கள் என தேர்தல் ஆணையம் விடுத்த சவாலை அரசியல் கட்சிகளால் முறியடிக்கப்படவில்லை. இருப்பினும் குற்றச்சாட்டு தொடர்கிறது. இந்நிலையில் 2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும், கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றது என சையது சுஜா என்ற இந்திய மின்னணு தொழில்நுட்ப நிபுணர் கூறியுள்ளார். இதுதொடர்பான உண்மை தெரிந்ததால் மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டார். 2014 தேர்தலுக்கு பின்னர் டெல்லியை தவிர்த்து பிற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மோசடி நடைபெற்றது எனவும் குற்றம் சாட்டினார். இதனை குறிப்பிட்டு ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் மறுப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாரத மின்னணு நிறுவனம் மற்றும் இந்திய மின்னணு கழகம் ஆகியவற்றால் கடுமையான கண்காணிப்பு-பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் மிக கவனமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மின்னணு துறையில் புகழ்பெற்ற நிபுணர்கள் அடங்கிய குழு, இந்த நடைமுறைகளை கண்காணிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சையது சுஜா விவகாரத்தில் சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா விமர்சனம்

இதற்கிடையே தொழில்நுட்ப நிபுணர் சையது சுஜாவின் பேட்டி, காங்கிரஸ் நடத்திய திகில் நாடகம் என்று பாஜக விமர்சித்துள்ளது. மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசுகையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி உறுதியாகிவிட்டது. எனவே, தோல்விக்கு கூற வேண்டிய காரணங்களை இப்போதே அவர்கள் தேட ஆரம்பித்துவிட்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான குற்றச்சாட்டுகள், இந்தியாவையும் இந்தியர்களையும் அவமதிக்கும் வகையிலானவை. அதுபோன்ற முயற்சிகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம். லண்டனில் நடைபெற்ற பேட்டியின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலும் இருந்துள்ளார். அது தற்செயலான நிகழ்வு அல்ல. ராகுல், சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அவரை அனுப்பி வைத்திருக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை கெடுக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி உள்நாட்டில் பலிக்கவில்லை.

இதனால், வெளிநாட்டிலிருந்து நமது தேர்தல் நடைமுறையை அவமதிக்க முயலுகின்றனர் என்றார். மேலும், மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டதாக, சையது சுஜா முன்வைத்த குற்றச்சாட்டையும் நக்வி மறுத்துள்ளார்.