காவிரி- கோதாவரி இணைப்புக்கு உலோகக் குழாய்களை பயன்படுத்த திட்டம்

Read Time:2 Minute, 44 Second

காவிரி நதியையும், கோதாவரி நதியையும் இணைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அமராவதியில் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் நிதின் கட்கரி பேசுகையில், கோதாவரி நதியில் இருந்து ஆண்டுதோறும் 1,100 டிஎம்சி தண்ணீர், வீணாகச் சென்று வங்கக் கடலில் கலக்கிறது. ஆனால், காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக, தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. எனவே, கோதாவரியை காவிரியுடன் இணைத்து, கோதாவரி நதி நீரை, தமிழகத்துக்குக் கொண்டு செல்வதற்கு முடிவு செய்துள்ளோம்.அதன்படி, கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணை-காவிரி ஆகிய நான்கு நதிகளையும் இணைக்கும் வகையில் விரிவான திட்டத்தை ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளோம்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரூ.60,000 கோடி வரை தேவைப்படும். இத்திட்டத்தை மத்திய அமைச்சரவையிடம் விரைவில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்படும். அதன்பிறகு உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதியுதவி பெறப்பட்டு, இத்திட்டம் தொடங்கப்படும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதால் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்னைகள் முடிவுக்கு வரும். காவிரியுடன் கோதாவரி இணைக்கப்பட்டு விட்டால், தமிழகத்தின் தென்கோடி வரை தண்ணீர் கிடைக்கும்.

இந்த இணைப்புத் திட்டத்தை உலோகக் குழாய்கள் மூலம் செயல்படுத்தலாம் என்று அமெரிக்க பொறியாளர் ஒருவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். ஏனெனில், இரு நதிகளுக்கும் இடையே கால்வாய் அமைத்தால், கோடைக்காலத்தில் தண்ணீர் வற்றிவிட வாய்ப்புள்ளது. கோதாவரி நீர் தமிழகத்தைச் சென்றடையாது. எனவே, வெப்பத்தையும், குளிரையும் தாங்கவல்ல பிரத்யேகக் குழாய்கள் வழியாக தண்ணீரை அனுப்பி, இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முடிவு செய்துள்ளோம். இதனால், திட்டத்துக்கு செலவாகும் தொகையும் வெகுவாகக் குறையும் என்று கூறியுள்ளார்.