இவிஎம் ஹேக்: சையது சுஜா இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் பணியாற்றவில்லை…!

Read Time:3 Minute, 39 Second

இந்தியாவில் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுகிறது என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டிவருவது தொடர் கதையாக இருக்கிறது.

இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய மின்னணு தொழில்நுட்ப நிபுணர் சையது சுஜா, இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றது. அதற்கு பின்னர் டெல்லியை தவிர்த்து பிற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் மோசடி நடைபெற்றது என்றார். இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

தேர்தல் ஆணையம் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய டெல்லி போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் இது தொடர்பாக டெல்லி போலீஸ் உதவி ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், ஹேக் செய்ய முடியும் என்று ஷுஜா கூறியதன் மூலம் அவர் பொதுவெளியில் தொந்தரவு செய்துள்ளார். இது இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 505(1) (பி)-யின் கீழ் குற்றமாகும். உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தங்களது தீர்ப்புகளில் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் பல்வேறு அரசியல் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது சந்தேகங்களை எழுப்ப ஜூன் 2017-ல் தேர்தல் ஆணையம் தங்கள் எந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? என்று நிபுணர்களுக்கு ஓபன் சாலஞ்ச் விடுத்தது.

“ஒருவரும் அத்தகைய நிரூபிப்புக்கு வரவேயில்லை” என்று தேர்தல் ஆணையம் தன் புகாரில் தெரிவித்தது.

இசிஐஎல் பணியாற்றவில்லை

2014 தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டது என குற்றம் சாட்டிய சையது சுஜா இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் பணியாற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) மற்றும் இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (இசிஐஎல்) நிறுவனங்கள் தயாரிக்கிறது. இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் தானும், தன்னுடைய குழுவும் பணியாற்றியது. குழுவில் உள்ளவர்களே சில தேர்தல்களில் மோசடிகளை தடுத்தனர் என்றெல்லாம் சையது சுஜா கூறியிருந்தார். இந்நிலையில் சையது சுஜா இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் பணியாற்றவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

சையது சுஜாவோ அல்லது அவருடைய குழுவை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டவர்களோ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் இசிஐஎல் நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.