இந்தியாவின் 9 கோடீஸ்வரர்களிடம் நாட்டின் 50 சதவீத சொத்துக்கள்…!

Read Time:5 Minute, 49 Second

இந்தியாவின் 50 சதவீத சொத்துகள் 9 கோடீஸ்வரர்களிடம் மட்டும் இருக்கிறது, 10 சதவீத கோடீஸ்வரர்கள் 77 சதவீத சொத்துகளை வைத்துள்ளனர் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற உள்ள நிலையில் சர்வதேச நலஅமைப்பான ஆக்ஸ்ஃபாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கோடீஸ்வரர்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதும், ஏழைகள் ஆண்டுக்கு ஆண்டு இன்னும் ஏழைகளாக மாறி வருவதும் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஆரோக்கியமானதல்ல என்றும் எச்சரித்துள்ளது.

ஆக்ஸ்ஃபாம் சர்வதேச அமைப்பின் நிர்வாக இயக்குநர் வின்னி பான்யிமா கூறுகையில், ”இந்தியாவில் உள்ள ஏழைகள் அடுத்த வேளை சாப்பிடுவதற்கும், தங்களின் குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கும் போராடி வரும் நிலையில், சில குறிப்பிட்ட கோடீஸ்வரர்களின் சொத்துகளின் அளவு மட்டும் வியக்கத்தக்க வகையில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருவது கொள்கை அளவில் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள ஒரு சதவீத கோடீஸ்வரர்களுக்கும், மீதமுள்ள இந்திய மக்களுக்கும் இடையிலான வெறுப்பூட்டும் வகையிலான இடைவெளி அதிகரித்தால், நாட்டின் சமூக, ஜனநாயகக் கட்டமைப்பு முழுமையாக சிதைந்துவிடும்”எனத் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்துகள் மட்டும் கடந்த ஆண்டு ரூ.2,200 கோடி அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 10 சதவீத மக்கள் அதாவது, 13.60 கோடி மக்கள் தொடர்ந்து வறுமையிலும், ஏழ்மை நிலையிலும் இருந்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்கள் நாட்டின் 77.4 சதவீத ஒட்டுமொத்த சொத்துகளையும் வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் மட்டும் நாட்டின் 51.53 சதவீத சொத்துகளையும் வைத்துள்ளனர்.

அடிமட்டத்தில் உள்ள 60 சதவீத மக்களிடம் நாட்டின் 4.8 சதவீத சொத்துகள் மட்டுமே உள்ளன. நாட்டின் 9 பணக்காரர்களின் மட்டும் நாட்டின் 50 சதவீத சொத்துகள் உள்ளன.

2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் இந்தியா 70 புதிய கோடீஸ்வரர்களை நாள்தோறும் உருவாக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 18 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 119 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர். இவர்களின் சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடியாகும்.

கடந்த 2017-ம் ஆண்டு 325.50 பில்லியன் டாலராக இருந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு 440.10 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் ஒரு சதவீதம் பேரின் சொத்துகள் மீது 0.5 சதவீதம் வரி விதித்தாலே நாட்டு மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்கு செலவிடக் கூடுதலாக 50 சதவீதம் நிதி கிடைக்கும்.

மத்திய, மாநில அரசுகளின் மருத்துவம், பொதுச் சுகாதாரம், குடிநீர் ஆகியவற்றின் வருவாய் மற்றும் செலவுகள் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 166 கோடியாகும். இது முகேஷ் அம்பானியின் ரூ.2.80 லட்சம் கோடியைக் காட்டிலும் குறைவுதான்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆரோக்கியமான கல்வி, தரமான சுகாதார வசதிகள் ஆகியவற்றைப் பணக்காரர்கள் மட்டுமே உயர் தரத்தில் பெற்று வருகின்றனர். இந்தியாவில் உள்ள ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள், பணக்கார வீடுகளின் குழந்தைகள் முதல் பிறந்த நாள் கொண்டாடுவதற்குள்ளாக இறக்கும் அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது

ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் கூறுகையில், ”இந்த ஆய்வின் முடிவுகள் மூலம், பொதுச்சேவைகளுக்கு அதாவது சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்குக் குறைவான நிதி ஒதுக்குவதன் மூலம் அரசு சமூகத்தில் சமத்துவமின்மையை மோசமாக அதிகப்படுத்தி வருகிறது என்பது தெரியவருகிறது.

உங்களின் குழந்தையின் கல்விக்கு எத்தனை ஆண்டுகள் செலவிடப்போகிறார், வாழப்போகிறார் என்பதை ஒருவரின் வங்கிக் கணக்கின் அளவை வைத்து முடிவு செய்யக்கூடாது. ஆனால், இதுதான் பெரும்பாலான நாடுகளில் நிலைமையாக இருக்கிறது.

நிலைமை இப்படி இருக்க கார்ப்பரேட்டுகள், கோடீஸ்வரர்கள் வரிச்சலுகையை அனுபவிக்கிறார்கள். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முறையான மகப்பேறு வசதியும் இல்லை, ஆரோக்கியமான கல்வியும் இல்லை” என்று அமிதாப் பெஹர் தெரிவித்தார்.நன்றி: இந்து தமிழ்திசை