‘கோரா’ தமிழ் இணையதளம்…!

Read Time:2 Minute, 22 Second

பயனாளர்களின் கேள்விக்கு அவர்களே பதில் அளிக்கும் வகையிலான கோரா இணையதளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும் தகவல் களஞ்சியமாக உருவாகியுள்ளது. ஆங்கிலத்தில் அதனுடைய சேவை பிரபலமாக உள்ளது. பதில் பெறும் இணையதளங்களில் கோரா (Quora) இணையதளம் உலக அளவில் முன்னிலையில் இருக்கிறது. முதன்முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இது, பயனாளர்களின் வரவேற்பு காரணமாக இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் உட்பட 16 மொழிகளில் விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது பதினேழாவதாக தமிழில் ‘கோரா’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் தளத்தின் இணைப்பு: https://ta.quora.com

கடந்த வாரம் முதல் கோராவின் தமிழ் இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இனிமேல் தமிழில் கேள்விகளைக் கேட்கவும், பதில் அளிக்கவும் முடியும்.

கோராவின் நிறுவனர் ஆடம் டி ஏஞ்சலோ வெளியிட்டுள்ள தகவலில், “உலகின் அறிவுச் செல்வத்தைப் பகிர்வதும் வளர்ப்பதுமே எங்களின் லட்சியம். அதற்காக நாங்கள் உயர் தரமான உள்ளடக்கத்தை உருவாக்கி வருகிறோம். தமிழ் மொழி பேசும் பலர் கோரா இணையதளத்தை ஆங்கிலத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். தற்பொழுது நாங்கள் தமிழ் மொழியில் தொடங்குவதன் மூலமாக மேலும், பலர் பங்கேற்பார்கள் என நம்புகிறோம்” என கூறியுள்ளார்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ‘கோரா’ தமிழ் தளத்தின் பயன்பாட்டாளர் ஒருவர், ”கோரா ஒரு அறிவுசார் தளம் என்பதால், அறிவுப்பூர்வமான கேள்விகளையும், விடைகளையும் இடுங்கள். வெற்றுப் பெருமை, வெறுப்புப் பேச்சு ஆகியவற்றைத் தவிருங்கள். உங்களது பெயர், முகவரி போன்ற விவரங்களை தமிழில் குறிப்பிடுங்கள்.

தரும் தகவல்கள் உண்மையானவை என்று உறுதிப்படுத்த சான்றுகள் இருந்தால் சேருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.