பிரதமர் மோடி எப்போதும் டீ விற்றதே கிடையாது…!

Read Time:2 Minute, 28 Second

பிரதமர் மோடி எப்போதும் டீ விற்றதே கிடையாது என்று விஎச்பி முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பொதுமேடைகளில் எப்போதும் தான் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன் என்றும், சிறுவயதில் ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து முன்னேறியதாகவும் குறிப்பிடுவார். தன்னுடைய பேச்சின் போதெல்லாம் தன்னை
ஏழைத் தாயின் மகன் என்றே அழைத்துக் கொண்டு அதுதொடர்பாக பேசுவார். 2014 தேர்தல் பிரச்சாரத்திலும் இது ஒரு முக்கிய அம்சமாக பாஜகவால் முன்னிறுத்தப்பட்டது. ஆனாலும் எதிர்கட்சிகள் இதை ஒரு சந்தேக கண்ணோடுதான் பார்த்து வந்தன. அதன் தொடர்ச்சியாக 2015-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில் பிரதமர் மோடி சிறு வயதில் டீ விற்றார் என்பதற்கு எந்தஒரு ஆதாரமும் எங்களிடம் இல்லை என மத்திய அரசு பதிலளித்து இருந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி எப்போதும் டீ விற்றதே கிடையாது என்று விஎச்பி முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச செயல் தலைவராக இருந்தவர் பிரவீன் தொகாடியா, பிரதமர் மோடியுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொறுப்பிலிருந்து வெளியேறினார். இப்போது அந்தராஷ்டிரிய ஹிந்து பரிஷத் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். பிரவீன் தொகாடியா பேசுகையில்,
பிரதமர் மோடியுடன் எனக்கு 43 ஆண்டுகால நட்பு உள்ளது. ஆனால். அவர் ஒருபோதும் டீ விற்றதே கிடையாது, மக்களிடம் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதற்காக அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் எண்ணம் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு கிடையாது. மக்களை ஏமாற்றுகிறது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.