உ.பி.யில் பா.ஜனதாவுக்கு 5 ‘சீட்’தான் கிடைக்கும்…!

Read Time:4 Minute, 17 Second

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்தால் பா.ஜனதாவிற்கு 5 ‘சீட்’தான் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளது. இதில் உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சிகளும் இடம்பெற்று உள்ளன. அதேநேரம் உத்தரபிரதேசத்தில், இந்த கட்சிகள் காங்கிரசை தங்கள் கூட்டணியில் சேர்க்காமல் கழற்றி விட்டு உள்ளன. இருப்பினும் இறுதியாகவில்லை. மாற்றம் இருக்கலாம் என பார்க்கப்படுகிறது.

2014 தேர்தலில் பா.ஜனதா கட்சி 71 தொகுதியிலும் அதன் கூட்டணியான அப்னா தளம் 2 தொகுதியிலும் வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் வெற்றிப்பெற்றனர். சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மாநிலத்தில் மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் வாஷ்-அவுட் ஆனது. இப்போது மாநிலத்தில் பெரிய கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அறிவித்துள்ளன. இது பா.ஜனதாவிற்கு பெரும் இழப்பாக பார்க்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் இரு கட்சிகளும் கூட்டணி வைப்பது இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை ஒன்றாக இணைக்கும், இது பா.ஜனதாவிற்கு பெரும் அடியாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் பா.ஜனதாவிற்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இப்போதையை கூட்டணி முடிவு அக்கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியா டுடே நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி காரணமாக மாநிலத்தில் பா.ஜனதாவிற்கு பெரும் அடியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணியாக போட்டியிட்டால் 58 தொகுதிகள் கிடைக்கும். காங்கிரசுக்கு 4 தொகுதிகள் கிடைக்கும். பா.ஜனதா கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டது. இதுவே பா.ஜனதாவிற்கு எதிராக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய லோக் தள் கட்சி மற்றும் பிற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அக்கட்சிக்கு பெரும் அடியிருக்கும், வெறும் 5 தொகுதிகள்தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் பேசுகையில் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி கூட்டணியில் இறுதி வார்த்தை இன்னும் வெளியாகவில்லை என கூறியுள்ளார். அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைக்கும் என்றே தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கருத்துக்கணிப்பு பிரியங்காவின் அரசியல் நுழைவு அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக எடுக்கப்பட்டது. பிரியங்காவின் அரசியல் நுழைவால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தனி இடம் கிடைக்கும் எனவும் குறிப்பிட்ட ராகுல், உபியில் மாயாவதி-அகிலேஷ் கூட்டணியில் சேர விரும்புவதையும் சூசகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.