காங்கிரஸின் கடைசி ஆயுதம்…!

Read Time:5 Minute, 19 Second

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.

காங்கிரஸ் தேர்தல்களில் தோல்வியை தழுவும்போதெல்லாம் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. 1999-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சோனியா, பெல்லாரி மற்றும் அமேதி என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அப்போதுதான் முதல் முறையாக பிரசாரத்திற்கு களமிறங்கினார் பிரியங்கா.
பிரியங்கா, தாயாருக்காக பெல்லாரி தொகுதியில் அதிகமாக பிரச்சாரம் செய்திருந்தார். இதனால், தன்னை எதிர்த்து பாஜகவின் சார்பில் போட்டியிட்ட சுஷ்மா ஸ்வராஜை வென்றார் சோனியா. இதனையடுத்து பிரியங்காவின் அரசியல் பணி தாயாரின் ரேபரேலி மற்றும் சகோதரர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியுடன் நின்றது.

2014 தேர்தலுக்கு பின்னர் பா.ஜனதாவின் வளர்ச்சி, பிராந்திய கட்சிகளின் புறக்கணிப்பால் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டது பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியது. பிரியங்கா காந்தியின் அரசியல் பயணம் தொடர்பான கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பதில் அளித்து பேசுகையில், “எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பது தொடர்பாக பிரியங்கா காந்திதான் முடிவு செய்ய வேண்டும்,” என்று நிறுத்திக்கொண்டார். இருப்பினும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக வைக்கப்பட்டது.

அலகாபாத்தில் இந்திராவின் ரத்தம், பிரியங்கா விரைவில் வருகிறார் என போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில் இந்திரா காந்தி மற்றும் அவரது பேத்தியான பிரியங்காவின் படங்கள் இடம்பெற்றது.

சமீபத்திய 5 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் வெற்றிப்பெற்றது. இதில் பிரியங்கா முக்கிய பங்காற்றினார். இதனையடுத்து முதல்-அமைச்சர்கள் தேர்வில் மோதல் நிலவிய போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதற்கிடையே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றியடை செய்ய வேண்டும் என்ற ஸ்திர நோக்கத்துடன் மக்கள் மத்தியில் கள ஆய்வு செய்து திட்டங்களை வகுக்கும் 100 செயல்திட்டம் ஒன்று அவர் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது என தகவல் வெளியாகியது.

2019 பாராளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக தகவல் வெளியாகியது.

இதற்கிடையே 80 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் வேண்டுமென்றால் அமேதி மற்றும் ரேபரேலியில் போட்டியிடுங்கள் என்று கூறி காங்கிரசை, சமாஜ்வாடி-பகுஜன்சமாஜ் கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டதால், பிரியங்காவின் அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ளது. யாரும் எதிர்பாராத நிகழ்வாக காங்கிரசில் முதல் முறையாக பிரியங்காவிற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை அறிவித்து உள்ளது.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் பிரதமர் வேட்பாளராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட உள்ளார். இவரை சமாளிக்க காங்கிரசிடம் இருக்கும் கடைசி ‘ஆயுதம்’ என பிரியங்கா என கட்சியினர் கூறி வந்தனர். ராகுல் பிரதமராக எடுபடுவது சந்தேகம் என கூறப்பட்டு வந்தது. இதனால், பிரியங்கா வாத்ரா களம் இறக்கப்படுவார் என்ற பேச்சு அடிக்கடி கிளம்பியபடி இருந்தது. இப்போது அவர் அரசியலுக்கு வந்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பிரியங்கா உ.பி.யில் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது. ரேபரேலியில் அவர் களமிறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா தனது பாட்டியான இந்திரா காந்தியின் முகஜாடை மற்றும் உடல்மொழியை கொண்டுள்ளார். இதற்கு, உபிவாசிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பு உள்ளது. இப்போது பிரியங்காவின் அரசியல் வருகையை காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர்.