மாயாவதி-அகிலேஷ் கூட்டணியுடன் பேச்சு நடத்த தயார் – ராகுல் சூசகம்

Read Time:3 Minute, 31 Second

உ.பி.யில் மாயாவதி-அகிலேஷ் யாதவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதகாக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சூசகமாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கைகோர்த்து உள்ளன. இதில் உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சிகளும் இடம்பெற்று உள்ளன. இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் காங்கிரசை சேர்க்காமல் கழற்றி விட்டு உள்ளன. இதனால் தனி மரமாக நிற்கும் காங்கிரஸ் கட்சி, உத்தரபிரதேசத்தில் தேர்தலை சந்திப்பது எப்படி? என்பது குறித்து கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக அங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என கட்சி முடிவு செய்தது.

இந்நிலையில் மாநிலத்தில் பிரியங்காவின் அரசியல் பயணத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காகவே பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இணைந்திருப்பதாகவும், அதனால் அவர்களுக்கு எதிராக எந்த விரோதமும் தனக்கு இல்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார். இளைய சகோதரி பிரியங்காவின் அரசியல் நுழைவு குறித்து ராகுல் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாயாவதி-அகிலேஷ் கூட்டணியை சமாளிக்க பிரியங்கா நுழைக்கப்படுவதாக கேள்வி எழுந்தது.

இதற்காக ராகுல் அளித்த பதிலில் கூறும்போது, ‘மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்துள்ளனர். இதில் மூவரின் நோக்கமும் பாஜகவை தோற்கடிப்பதே. இந்த இருவருடனும் எங்களுக்கு எந்த விரோதம் இல்லை அன்பு உள்ளது. எனவே, அவர்கள் தொடர்ந்து எங்களுடன் பேச விரும்பினால் எந்த ஆட்சேபனையும் இல்லை.’ என தெரிவித்தார்.

வரும் நாட்களில் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘மாயாவதிஜி, அகிலேஷ்ஜி மீது நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். நம் அனைவரின் கொள்கைகளில் அதிக ஒற்றுமை உள்ளது. இந்த இருவருக்கும் பாஜகவை தோல்வியுறச் செய்ய எங்கள் உதவி தேவைப்படும் போதெல்லாம் ஒத்துழைப்பளிக்க தயாராக உள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.
‘பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இணைந்து பாஜகவை தோற்கடிக்கச் செய்யும் இடங்களில் எல்லாம் நாம் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். பிரியங்காவின் வருகை சில பாஜகவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.’ எனவும் குறிப்பிட்டார்.

பிரியங்காவின் அரசியல் நுழைவால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தனி இடம் கிடைக்கும் எனவும் குறிப்பிட்ட ராகுல், உபியில் மாயாவதி-அகிலேஷ் கூட்டணியில் சேர விரும்புவதை காட்டுவதாகக் கருதப்படுகிறது.