‘ராகுல் தோல்வியை காங்கிரஸ் ஒப்புக்கொண்டது’ எங்களுக்கு எந்தஒரு சவாலும் கிடையாது பா.ஜனதா கிண்டல்

Read Time:3 Minute, 21 Second

பிரியங்காவிற்கு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து ராகுல் தோல்வியடைந்தார் என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது என பா.ஜனதா கூறியுள்ளது.

80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சமாஜ்வாடி-பகுஜன்சமாஜ் கட்சிகள் மெகா கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டது. இதனையடுத்து காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

இந்நிலையில் உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதா, ராகுல் காந்தி தோல்வியடைந்தார் என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது என கூறியுள்ளது.

பிரியங்கா காந்தி நியமனம் தொடர்பாக பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா பேசுகையில், “இது எதிர்பார்த்த ஒன்றுதான், வாரிசை மேம்படுத்துவது காங்கிரஸை சேர்ந்தது. அவர்கள் குடும்பம்தான் கட்சி என்று பார்க்கிறார்கள். ஆனால் பா.ஜனதா கட்சிதான் குடும்பம் என்று பார்க்கிறது. இப்போது காங்கிரஸ் ராகுல் காந்தி தோல்வியை அடைந்து விட்டார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது” என கூறினார்.

பிரதமர் மோடி மராட்டிய மாநில பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் காணொலி காட்சி மூலம் பேசுகையில், பல இடங்களில் குடும்பமே கட்சியாக உள்ளது. ஆனால் பா.ஜ.க.வினருக்கு கட்சியே குடும்பம். பா.ஜனதாவில் முடிவுகள் ஒரு தனிநபரின் நலனுக்காகவோ, ஒரு குடும்பத்தின் நலனுக்காகவோ எடுக்கப்படமாட்டாது. கட்சி தொண்டர்களுக்கு என்ன தேவையோ அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். ஜனநாயக கொள்கைகள் அடிப்படையில் பா.ஜனதா செயல்படுகிறது. ஜனநாயகம் நமது நரம்பிலேயே ஓடுகிறது. அதனால் தான் நாட்டு மக்கள் நமது கட்சியுடன் நெருக்கமாக உள்ளனர் என்றார்.

எங்களுக்கு சவால் கிடையாது

உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் மகேந்திரநாத் பாண்டே பேசுகையில், 2019 தேர்தலில் வெற்றிப்பெற்று பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்கு சாத்தியமான ஒவ்வொரு நடவடிக்கையும் காங்கிரஸ் எடுக்கிறது. ஆனால், பா.ஜனதாவிற்கும், பிரதமர் மோடிக்கும் எப்போதுமே மக்களுடைய பலம் உள்ளது. இப்போது சோனியா காந்தி அரசியலில் பிரியங்காவையும் இணைத்துள்ளார். இதனால் எதுவும் நடக்கப்போவது இல்லை. பிரியங்காவின் அரசியல் வருகையால் பா.ஜனதாவிற்கு ஒரு சதவீத சவால்கூட கிடையாது என கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மக்களுடனான அனைத்து தொடர்பையும் இழந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.