படேல் சிலைக்கு கடல் விமானம், தங்களுடைய வாழுமிடத்தை இழக்கும் 500 முதலைகள்…!

Read Time:5 Minute, 56 Second

‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. ரூ. 3000 கோடியளவில் சிலை அமைக்கப்பட்டது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது. சிலையின் கட்டுமானத்திற்கும், அதன் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கும் உள்ளூர் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சிலை திறக்கப்பட்ட பின்னர் நர்மதா மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ரெயில் போக்குவரத்து கிடையாது. அகமதாபாத்திலிருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த சிலையை காண பஸ் போக்குவரத்து மட்டுமே உள்ளது. 2017-ம் ஆண்டு குஜராத்தில் நீரில் தரையிறங்கும் வசதிக்கொண்ட விமானச் சேவை தொடங்கப்பட்டது. ஆமதாபாத் வழியாகப் பாயும் சபர்மதி ஆற்றில் இருந்து கடல் விமானத்தில் புறப்பட்ட மோடி, வடக்கு குஜராத்தின் மேஹ்சானா மாவட்டம் தரோய் அணைப் பகுதி வரை பயணித்தார். இரு இடங்களில் மோடியின் வசதிக்காக ஆற்றில் மிதக்கும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டிருந்தது. இப்போது இதேபோன்று நீரில் தரையிறங்கும் வகையிலான விமானத்தை வல்லபாய் படேல் சிலை பகுதியை சென்றடைய இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நர்மதா அணைக்கட்டு பகுதிக்கு கடல் விமானத்தை இயக்க வாய்ப்பு உள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்ய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து குஜராத் அரசு நடவடிக்கையை எடுக்கிறது என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இப்போது கடல் விமானம் இயக்கும் திட்டம் அங்குள்ள முதலைகளுக்கு பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது. சிலை அமைந்துள்ள பகுதியில் குளங்கள் அமைந்துள்ளது. அங்கு 500-க்கும் அதிகமான முதலைகள் உள்ளது. இப்போது நீரில் விமானம் வந்திறங்கும் வசதிக்காக சிலை வளாகத்திற்கு அருகிலுள்ள நீர்தேக்கத்திலிருந்து முதலைகளை வேறு இடத்திற்கு மாற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கிவிட்டனர்.

இதற்காக பிரமாண்ட இரும்பு கூண்டுகள் தயார் செய்யப்பட்டு சாலை மார்க்கமாக முதலைகள் குஜராத்தின் மேற்கு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சரியாக எத்தனை முதலைகள் இருக்கும் என்று கணக்கிடப்படாத நிலையில் இதுவரை 12-க்கும் அதிகமான முதலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. `சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக` இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது என்று உள்ளூர் வனத்துறை அதிகாரி அனுராதா சஹூ கூறியுள்ளார்.

ஆனால் சிலை அமைந்துள்ள பகுதி முதலைகள் வாழ ஏதுவான பகுதியாக உள்ளது. இந்த இடத்தை விட்டு இடமாற்றம் செய்வது முதலைகளுக்கு வாழ்வியலுக்கு எதிராகவும் அமையலாம். புதிய இடம், முதலைகளின் இனப்பெருக்கத்துக்கு தடையாக அமையும் வாய்ப்பு உள்ளதாகவும் விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் முதலைகளை இடமாற்றம் செய்யாமல் வேறு ஏதாவது நடவடிக்கை எடுக்க மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடிக்கணக்கில் செலவு செய்து உலகின் உயரமான சிலையை நிறுவியவர்கள் விமானம் தரையிறங்கும் வகையில் வேறு ஒரு ஏரியை அமைத்து இருக்கலாம் என்று விமர்சனம் செய்யப்படுகிறது.

லாரி, டிரக் போன்ற வாகனங்கள் மூலமாக, இதுவரை 12 முதலைகள் வரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, நாட்டின் வனஉயிர் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது என்கிறார், சமூக அறிவியல் மைய இயக்குநர் ஜித்தேந்திரா கவாலி. `அரசு முதலைகள் வாழுமிடத்தை தொந்தரவு செய்வதோடு, அவற்றின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இடமாற்றம் செய்யப்படும் முதலைகள் எங்கு பாதுகாப்பாக விடப்படும் என்று அரசு யோசிக்கவில்லை. மொத்தத்தில் எந்தஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படாமல் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் ஜித்தேந்திரா கவாலி.

இதற்கிடையே முதலைகளை இடம் மாற்றம் செய்யும் வனத்துறை அதிகாரிகள், எங்களுக்கான பணியை செய்கிறோம், எத்தனை முதலைகள் இருக்கிறது என்பதும் தெரியாது, கடல் விமானம் இயக்கப்படுவது தொடர்பாகவும் எதுவும் தெரியாது என கூறியுள்ளனர். முதலைகள் இடமாற்ற நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளது.