பிரியங்கா பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியுமா?

Read Time:8 Minute, 24 Second

பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியதை அடுத்து இப்போது பிரியங்கா மோடிக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

மத்தியில் ஆட்சியமைக்கும் அரசியல் கட்சியை நிர்ணயம் செய்வதில் உத்தரபிரதேச மாநிலம் முழுமுக்கியமான மாநிலமாக இருக்கிறது. 80 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் 2014-ம் தேர்தலில் பா.ஜனதா 73 தொகுதிகளை வென்றதால் ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு முக்கியத்துவம் இல்லாமல் சென்றது. ஆனால் 2019 தேர்தல் பா.ஜனதாவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் ஐயம் கிடையாது. மாநிலத்தில் பெரும் கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியும் பா.ஜனதாவிற்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளது. இதனால் பா.ஜனதாவின் வெற்றி கணக்கு சரியும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 2009 தேர்தலில் 21 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் கடந்த தேர்தலில் 2 தொகுதியை மட்டுமே வென்றது. அதுவும் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி மற்றும் ராகுல் போட்டியிட்ட அமேதியிலும்தான். இந்த தேர்தலில் காங்கிரசை தனித்துவிட்டுவிட்டு சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. இருப்பினும் ரேபரேலி, அமேதியில் போட்டியில்லை என்று கூறியுள்ளது. மாநில கட்சிகள் நிராகரிப்பை அடுத்து திடீரென காங்கிரஸ் பிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டுவந்துள்ளது.

இந்திராவின் சாயலில் இருக்கும் பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்று 2014-ம் ஆண்டில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கிழக்கு உ.பி.யின் தலைமையாக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா கட்சி பொறுப்பை கையில் எடுக்கும் பகுதியில்தான் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் கோட்டையும் அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணிக்கு இடையே பா.ஜனதாவிற்கு சவாலாக பிரியங்காவின் வரவு அமைந்துள்ளது. மாநிலத்தில் பிராமணர்கள் வாக்கு சிதறும் என பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நேரடி அரசியலுக்கு வந்துள்ள பிரியங்காவை வருகிற பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அழைப்பு விடுக்க தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரியங்காவை எந்த தொகுதியில் களம் இறக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தொகுதியான வாரணாசியில் அவருக்கு எதிராகவே பிரியங்கா வத்ராவை நிறுத்தவேண்டும் என்று உ.பி.காங்கிரஸார் விரும்புவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உபியின் வாரணாசியில் போட்டியிடுகிறார். வரை எதிர்த்து, தற்போது தீவிர அரசியலில் இறக்கப்பட்டுள்ள பிரியங்கா போட்டியிட வேண்டும் என குரல்கள் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளன. வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி உ.பி.யின் கிழக்குப்பகுதி நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘பிரியங்காவை எம்பியாக்க காசி மக்கள் குரல் கொடுங்கள்’ என அதற்கு தலைப்பும் இட்டுள்ளனர்.

2014 தேர்தலில் பிரதமர் மோடி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை வாரணாசியில் பதிவு செய்தார். மோடிக்கு 5,81,022, இரண்டாவது இடம் வகித்த ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 2,09,238 வாக்குகளும் கிடைத்திருந்தன. வாரணாசி மாவட்டத்தில் பாஜக சார்பாக மூன்று முறையும், சுயேச்சையாகவும், காங்கிரஸிலும் தலா ஒரு முறையும் எம்எல்ஏவாக இருந்த அஜய் ராய் போட்டியிட்டார். அவருக்கு 75,614 வாக்குகளுடன் மூன்றாவது இடம் கிடைத்தது.

பிரதமர் மோடியை எதிர்த்து, தற்போது தீவிர அரசியலில் இறக்கப்பட்டுள்ள பிரியங்கா போட்டியிட வேண்டும் என குரல்கள் எழுந்துள்ள நிலையில் அது சாத்தியமா? என்று பார்த்தால் இதிலும் பா.ஜனதாவிற்கு சிறிய சவால் இருக்கவே வாய்ப்பு உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கூட்டணியை அறிவித்து உள்ள சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் காங்கிரசுக்காக அமேதியையும், ரேபரேலியையும் விட்டு வைத்துள்ளது. இதற்கிடையே வாரணாசியில் பிரியங்கா களமிறக்கினால் அவர்களுடைய முழு ஆதரவும் கிடைக்கும். பிரதமர் மோடியை எதிர்க்கும் வண்ணம் வலுவான வேட்பாளராக பிரியங்காவை பார்க்கும் அக்கட்சிகள் ஆதரவை கொடுக்கும். இது பிரியங்காவிற்கு சாதகமாக அமையும். இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர், யாதவ் பிரிவினர் வாக்கும் அவருக்கு செல்லும். தோராயமாக 5.30 லட்சம் வாக்குகள் பிரியங்காவிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

இதுபோக பிராமணர்கள், ராஜ்புத் வாக்கு வங்கி பா.ஜனதாவிற்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது. இப்படி 8 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு பா.ஜனதாவின் பிடியில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. தொடக்க கால கட்டங்களில் காங்கிரஸ் வசமிருந்த பிராமணர்களின் வாக்கு வரிசையாக பா.ஜனதா வசம் சென்றது. இப்போது பிரியங்கா வருகையில் இதில் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உயர் வகுப்பினர் வாக்கினை வெகுவாக பிரியங்கா உடைப்பார் என நம்பப்படுகிறது. இதற்கிடையே பா.ஜனதாவும் தன்னுடைய வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்ளும். உயர் வகுப்பினர் வாக்கை பிரியங்கா ஆக்கிரமிப்பு செய்தால் பா.ஜனதாவிற்கு போட்டி எதிர்பார்ப்பதைவிட கடுமையானதாகவே அமையும்.

மாநிலத்தை பொறுத்தவையில் பிரியங்காவுடன் காங்கிரஸ் களமிறங்கும் நிலையில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி வாக்குகளை பிரிக்கவும் வாய்ப்பு உள்ளது, இதனால் பா.ஜனதாவிற்கு சாதகமான நிலையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது. இதற்கிடையே பிரியங்கா, சோனியாவின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வாரணாசியில் போட்டியிட்டு தோல்வியென்றால் பிரியங்கா, காங்கிரசுக்கு சங்கடமான நிலை ஏற்படும். இந்நிலையில் பிரியங்காவை காங்கிரஸ் களத்தில் இறக்குமா? வாரணாசியில் இறக்குமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.