பத்ம ஸ்ரீ விருது பெறும் மதுரை சின்னப்பிள்ளை…!

Read Time:6 Minute, 43 Second

குடும்பத்தில் பெண்கள் தங்களின் தேவைகளை சிந்தித்து செயல்பாட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணம் சின்னப்பிள்ளை.

சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி கெளரவிப்பார். இந்த ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளைக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடமே செல்லாமல் சிறுவயதிலேயே அனைவருக்காவும் சமூக சேவையாற்றி இப்போது 14 மாநிலங்களில் சேவைகளை செய்துவருபவர்.

விவசாயக் வேலைகளை பார்த்துவந்த சின்னப்பிள்ளைக்கு பால்ய வயதிலயே திருமணம் நடந்தது. புல்லுசேரி கிராமத்திற்கு வாழ்க்கை பட்டு வந்தவருக்கு, வழக்கமான கிராமப் பெண்களுக்கான போராட்டமான வாழ்க்கையே அமைந்தது. கிராமபுறங்களில் விழிப்புணர்வு செய்யும் மாதர் சங்கத்தினர், தொண்டு நிறுவனங்களில் பேச்சுக்களை கேட்டு அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அவருடைய கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல், வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விவசாய வேலைகளை செய்யத் தொடங்கினார். அப்போது வேலை செய்தவர்களுக்கு சரியாக கூலி கிடைப்பதில்லை. அதோடு ஏராளமானோர் வேலையும் இல்லாமல் இருப்பது அவரை வருத்தியது.

இதனையடுத்து 1980-களில் எந்த தொழிலிலும் இல்லாமல் வறுமையின் சூழலில் சிக்கித்தவித்த தன்னுடைய கிராம மக்களின் ஏழ்மையை போக்க நில உரிமையாளர்களிடம் இருந்து நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயக் கூலியாட்களை அணி திரட்டி, நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல் போன்ற பணிகள் செய்து, அதில் வரும் மொத்தக்கூலியை அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டு வழங்கினார். சிறுசேமிப்பு திட்டங்களையும் ஸ்திரமாக செயல்படுத்தினார்.

இதற்கிடையே மதுவுக்கு எதிராக சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமங்கள்தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டார். கிராமத்துக்கு தேவையானவற்றை நிறைவேற்றும் பணிகளை முன்நின்று செய்தார். அரசு அதிகாரிகளிடம் மனுவாக எழுதிக் கொடுத்து, அவற்றை தங்கள் கிராமங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார். மதுரையில் செயல்பட்டு வந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான `தானம் அறக்கட்டளை’ தொடங்கிய களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழுத் திட்டத்துக்கு சின்னப்பிள்ளையை தலைவராக நியமித்தது.

வட்டிக்கு வாங்கி காலம் முழுவதும் கடனை அடைக்க முடியாமல் திணறும் கிராமப் பெண்களுக்கு `களஞ்சியம் இயக்கம்’ பெரும் உதவியாக இருந்தது. சின்னப்பிள்ளை செயல்பாட்டால் களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழு திட்டம் ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் எழுச்சி தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதால், தமிழக அரசு சின்னப்பிள்ளையை கௌரவிக்கும்விதமாக அவரைப் பாராட்டி விருது வழங்கியது.


சின்னப்பிள்ளையிடம் ஆசிர்வாதம் பெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்…

கடந்த 1999-ம் ஆண்டில் இந்திய அரசு சமுதாயப் பணியில் சிறந்து விளங்கும் மகளிர்க்கு அளிக்கும் “ஸ்ரீ ஸ்திரீ சக்தி” விருதினை சின்னப்பிள்ளைக்கு வழங்கியது. அப்போது விருதை வழங்கிய பிரதமராக இருந்த வாஜ்பாய் வழங்கியதோடு, அவருடைய பாதம் பணிந்தார். அன்றே சின்னப்பிள்ளையின் பெயரும் இந்தியா முழுமைக்கும் உச்சரிக்கப்பட்டது. அதன்பிறகு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள “பொற்கிழி விருதும்”, தொழில் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்காக ”ஜானகிதேவி” விருதினையும், 2007 ஆம் ஆண்டு சமூக சேவைக்காக தூர்தர்ஷன் பொதிகை விருதினையும் பெற்றதோடு ,எளிமையான கிராமத்து பெண்ணாக இன்னமும் தன்னுடைய வாழ்க்கையை நடத்திவருகிறார் சின்னப்பிள்ளை. தொடர்ந்து பணி செய்கிறார்.

நாட்டிலுள்ள பல கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு சென்று கிராமப்புற பொருளாதாரம் பற்றி மாணவர்களிடையே பேசி வருகிறார். மதுப்பழக்கத்தின் கேடு, அதனால் ஏற்படும் தீமைகள் பற்றிப் பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இப்போதைய அ.தி.மு.க. அரசு, சில மாதங்களுக்கு முன் சின்னப்பிள்ளைக்கு விருது கொடுத்து கௌரவித்தது. வெளியுலகமோ, அரசியலோ தெரியாத வெள்ளந்தி மனுஷியான சின்னப்பிள்ளை, குடிபோதையில் சிக்கித் தவிப்பவர்களை மீட்டெடுப்பதும் கந்துவட்டிக் கொடுமையை ஒழிப்பதும் முழுநேரப் பணியாக செய்து வருகிறார்.

எல்லைகள் எதுவுமின்றி சாதனை பெண்மணியாகவும் தலைநிமிர்ந்து வாழ்ந்து வரும் சின்னப்பிள்ளைக்கு 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.