கும்பமேளாவில் ஆரம்பம் ஆகிறது பிரியங்காவின் அரசியல் இன்னிங்ஸ்…

Read Time:2 Minute, 32 Second

கும்பமேளாவில் புனித நீராடி அரசியல் பயணத்தை பிரியங்கா தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக ‘மெகா’ கூட்டணி அமைக்கும் கனவில் காங்கிரஸ் இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக கைகோர்த்த சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்தன. இதனால் காங்கிரஸ் தனித்து விடப்பட்டது. இந்நிலையில் தனித்து போட்டியிடப்போவதாக காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறபோது ஓட்டுகளை அள்ளுவதற்கு வசதியாகவும், தீவிர பிரசாரம் மேற்கொள்ளவும் பிரியங்காவை களமிறக்கியுள்ளது.

பிரியங்கா, பிப்ரவரியில் அரசியல் பயணத்தை முறைப்படி தொடங்கும் முன்பு கும்பமேளாவில் புனித நீராடி தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் பிப்ரவரி 4 அன்று கும்பமேளாவிற்குச் செல்கின்றனர். அங்கு கங்கைக் கரையில் நடைபெறும் மவுனி அமாவாஸ்யா மற்றும் ஷாஹி ஸ்னானம் ஆகிய இரு புனித சடங்குகளில் இருவரும் பங்கேற்க உள்ளனர். ஆனால், பிப்ரவரி 4-ம் தேதி புனித நீராடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், பிப்ரவரி 10 ஆம் தேதி பஸந்த் பஞ்சமி மற்றும் 3-வது ஷாஹி ஸ்னானம் ஆகிய சடங்குகளின்போது கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அலகாபாத் திரிவேணி சங்கமத்திற்குச் சென்று அங்கு புனித நீராடுவதற்காக, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் செல்வது இதுவே முதல் முறையாகும். 2001-ல் அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி கும்பமேளா சென்று புனித நீராடினார். பிப்ரவரி மாதம், கும்பமேளா நிகழ்வுகளில் பங்கேற்ற பிறகே பிரியங்கா, லக்னோவில் ராகுலுடன் இணைந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்.