வங்கி லாக்கருக்கு யார் பொறுப்பு?

Read Time:6 Minute, 18 Second

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள 5 லாக்கர்களை உடைத்து பணம், நகைகளைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வங்கியின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கேஸ் வெல்டிங் இயந்திரத்தின் மூலம் 5 லாக்கர்களை உடைத்து அதில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சமயபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஜனவரி 26 குடியரசு தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறையாக இருந்ததால் கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளனர். 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று வங்கியை அதிகாரிகள் திறந்த போது, வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் கொள்ளைச் சம்பவம் என்று நடந்திருக்கும் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

கொள்ளையர்கள் பயன்படுத்திய கேஸ், வெல்டிங் இயந்திரம், சுத்தியலை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். வங்கியில் உள்ள அலாரம் வேலை செய்யாதது ஏன்? கொள்ளையர்கள் யார் என்ற விவரம் எல்லாம் சிசிடிவி காட்சிகளை சோதித்தால் மட்டுமே தெரிய வரும் என கூறப்படுகிறது. 39, 114, 223, 299, 300 ஆகிய எண்களைக் கொண்ட வங்கி லாக்கர்கள் உடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கொள்ளை செய்தியைப் பார்த்த வங்கி வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் வங்கி முன்பு குவிந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுக்கு வங்கி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சில குறிப்பிட்டனர். ஆனால் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி வங்கிகள் பொறுப்பு ஏற்காது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் பொறுப்பு?

வங்கி லாக்கர் மிகவும் பாதுகாப்பானது என்கிற எண்ணம் நமக்கு இருக்கிறது. பணம், ஆவணங்கள் மற்றும் நகையை பாதுகாப்பு கருதி அங்கு வைக்கிறோம். ஆனால் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளவை திருடு போனாலோ அல்லது பாதிப்படைந்தாலோ என்ன செய்வது? என்ற புரிதல் சரியாக இல்லாத நிலையே தொடர்கிறது. லாக்கரில் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். தவிர வங்கிகள் கூடுதல் தொகையை டெபாசிட் செய்ய வலியுறுத்தும். இந்த நிலையில் வங்கி லாக்கர் குறித்து வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்வது அவசியமாகும்.

லாக்கரில் உள்ள பொருட்கள், பணம், ஆவணங்கள் மற்றும் வங்கிக்கும் இடையான தொடர்பு குறித்து ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வகுத்துள்ளது. வங்கி லாக்கரில் திருட்டு, கொள்ளை ஆகியவற்றால் இழப்பு நேரிட்டால் வங்கிகள் இழப்பீடு அளிக்காது. லாக்கருக்கான ஒப்பந்தத்தில் இதற்கான விதிகளை வங்கிகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். லாக்கர் விஷயத்தில் வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையிலான தொடர்பு வாடகைக்கு இடம் வழங்குவது போன்றுதான்.

வங்கி லாக்கரை வாங்கும் போது, லாக்கருக்கு வங்கிகளை பொறுப்பாக்க முடியாது என்கிற அடிப்படையிலேயே பெறுகிறோம். லாக்கரில் என்ன பொருட்களை வைப்போம் என்பதும், அதன் மதிப்பு எவ்வளவு என்பது வங்கிகளுக்கு தெரியாது. அதனால் லாக்கரை கொடுக்கும் வங்கிகள் அதற்கு பொறுப்பேற்க தேவையில்லை. இது ஒப்பந்தத்தில் தெளிவு செய்யப்படுகிறது. வீடு ஒன்றின் உரிமையாளர் போன்று வங்கியும், வாடகைதாரர் போன்று வாடிக்கையாளரும் லாக்கர் விஷயத்தில் கருதப்படுவார்கள். வாடகைக்கு இருக்கும் வீட்டில் திருட்டு போனால் வீட்டு உரிமையாளர் பொறுப்பு ஆக முடியாது. அதுபோலதான் லாக்கர் விஷயமும். வங்கிக்கு பொறுப்பு கிடையாது.

லாக்கரில் வைக்கப்படும் பொருட்ளுகளுக்கு பொறுப்பை வாடிக்கையாளரே ஏற்க வேண்டும். தேவைப்பட்டால் காபீடு செய்யலாம். வங்கி லாக்கர் அறைகளின் பாதுகாப்பு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படியே அமைக்கப்படுகின்றன. பாதுகாப்பை மீறி நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு தாங்கள் பொறுப்பு கிடையாது என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வங்கிகளின் சேவை குறைபாடுகள் காரணமாக இழப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம். அப்போது வங்கிகள் சரியான பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை அல்லது சரியான வழிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

2017-ல் குஷ்கல்ரா என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அவர் கேட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி மற்றும் 19 பொதுத்துறை வங்கிகள் அளித்த பதிலில், லாக்கரில் திருட்டு, கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பு ஏற்காது என தெரிவிக்கப்பட்டது.