நெல்லை, தஞ்சை, மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மக்களுக்கு வரப்பிரசாதம்…!

Read Time:5 Minute, 23 Second

மதுரையில் ரூ.1264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து மதுரை, தஞ்சை, நெல்லையில் மருத்துவ கல்லூரிகளில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நெல்லை

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இது மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் கட்டப்பட்டது. தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக கட்டுப்பட்டு இருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 8 மாடி கொண்டதாகும். 330 படுக்கை வசதிகள் கொண்டது. 280 உள்நோயாளிகளுக்கும், 50 தீவிர சிகிச்சை பிரிவுக்கும் படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த ஆஸ்பத்திரியில் 7 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகளும், கதிரியக்கப்பிரிவு, மைய கிருமி நீக்கும் துறை ஆகியவைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. 10 மின் தூக்கி (லிப்ட்) வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்பத்திரி பசுமை கட்டிட விதியின்படி கட்டப்பட்டு உள்ளது.

இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன சிறப்பு மருத்துவத்திற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.முதற்கட்டமாக நரம்பியல், இதயவியல், நெப்ராலஜி, யூராலாஜி, பிளாஸ்டிக் சர்ஜரி, மெடிக்கல் கேஸ்ட்ரோ ஆகிய துறைகளில் முழு வசதிகளும் கிடைக்க உள்ளன. குறிப்பாக பைபாஸ் சர்ஜரி, திறந்த இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய்கள் தொடர்பான அறுவை சிசிக்சை வசதிகள், குடல், கல்லீரல் நோய்கள் தொடர்பான சிகிச்சைகள், தலைக்காயம் மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான சிகிச்சை வசதிகளும் கிடைக்கும். இந்த சிகிச்சை வசதிகளுக்காக தென்மாவட்டத்தினர் இதுவரை திருவனந்தபுரம் அல்லது சென்னை போன்ற தொலைதூர இடங்களுக்கு செல்லவேண்டி இருந்தது. இப்போது நெல்லையிலே கிடைக்க உள்ளது தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாகும்.

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயார் செய்யும் அமைப்பும் அமைக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திருச்செந்தூர் சாலை மற்றும் ஐகிரவுண்டு, டிஜஜி பங்களா செல்லும் சாலைகளையொட்டி இந்த பரந்த விரிந்த கட்டிடம் அமைந்துள்ளது. நான்கு வழிச்சாலையின் மிக அருகே இருப்பதால் 4 தென் மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகள் மாநகருக்குள் நுழையாமல் போக்குவரத்து நெரிசலின்றி மருத்துவமனைக்குள் வரமுடியும்.

தஞ்சை

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் 8.3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 20 ஆயிரத்து 196 சதுர அடி பரப்பளவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் மொத்தம் 5 மாடிகளுடன் 3 பிரிவுகளை கொண்டது. இங்கும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இருதய மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பியல் மருத்துவ சிகிச்சை பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மருத்துவ சிகிச்சை பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு, உடல் இரைப்பை மருத்துவ சிகிச்சை பிரிவு, உடல் இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவு, வாஸ்குலர் அறுவை சிகிச்சை பிரிவு, கதிரியக்க அறுவை சிகிச்சை பிரிவு, மயக்கவியல் சிகிச்சை பிரிவு, மருத்துவ ஆய்வகம், ரத்த வங்கி ஆகியவை செயல்பட உள்ளது.

மதுரை

மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தின் ஒரு பகுதியில் மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.150 கோடி மதிப்பில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையோடு, ஜப்பான் நாட்டின் நிதியுதவியோடு நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் கட்டப்பட உள்ளன. இங்கும் நெல்லை மற்றும் தஞ்சையில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளும் இருக்கும்.