மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மூலிகையோடு தயாரிக்கப்பட்ட இயற்கை நாப்கின்..!

Read Time:7 Minute, 45 Second

அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.எச்டி மாணவி ப்ரீத்தி ராமதாஸ், மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் இயற்கையான நாப்கினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 விதமான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. வாட்டர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள் என மொத்தம் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதை மீறி செயல்படுபவர்கள் மீது அபாரதத்துடன் கூடிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி மக்களும் பாக்குமரத் தட்டு, பப்பாளி உறிஞ்சி குழல், வாழை இலை போன்ற பிளாஸ்டிக்குக்கான மாற்றுப் பொருட்களை நாடி வருகின்றனர். பெண்களுக்கு சுமார் 12 வயது முதல் 50 வயது வரை ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பொதுவாக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நேப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக பல்துறை வல்லுநர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

சானிட்டரி நாப்கின் விளைவு

சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெண்கள் நல சிறப்பு மருத்துவர் சியாமளா பிபிசியிடம் பேசுகையில், “பொதுவாக பிளாஸ்டிக்கை அடிப்படையாக கொண்ட பல்வேறு வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு நல்லதைவிட அதிகளவில் தீங்கையே விளைவிக்கிறது. பல வருடங்களாக சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்துபவர்களுக்கே அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுகாதார பிரச்சனைகளுக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது.”

“சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் மட்டுமின்றி மாதவிடாய் காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன” என்று கூறியுள்ளார்.

“சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இந்தியா முழுவதும், தற்போது கிராமப்புற பகுதிகளிலுள்ள பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வரும் துணி அடிப்படையிலான பாரம்பரிய முறையே சிறந்தது. அதாவது, வீட்டிலேயே பருத்தியிலான இலகுவான துணிகளை கொண்டு தைக்கப்படும் உடையே சிறந்தது” என்றும் கூறுகிறார்.

இயற்கை நாப்கின்

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.எச்டி மாணவி ப்ரீத்தி ராமதாஸ், மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் இயற்கையான நாப்கினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

”இந்த நாப்கின்கள் செல்லுலோஸை அடிப்படையாகக் கொண்டவை. இது மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் சாறுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பெண்களுக்கு பாக்டீரியா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகவும் இது செயலாற்றுகிறது” என்று கூறும் மாணவி ப்ரீத்தி, இந்த நாப்கின்கள் ஒரு மாதத்துக்குள்ளாக மட்கும் தன்மை கொண்டவை என்று தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகம் புதிய தயாரிப்புக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது.

இயற்கையான முறையில் நாப்கின்களை தயாரிக்கும் முறையை 2015-ம் ஆண்டே கையில் எடுத்த மாணவி ப்ரீத்தி, மிகவும் மெலிதாக இருக்கும் இந்த நாப்கின், 3 மி.மீ. தடிமன் கொண்டது. தன்னுடைய எடையைக் காட்டிலும் 1,700% அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. தாவரங்களின் மூலம் கிடைக்கும் பாலிமர்கள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் இந்த நாப்கினில் பயன்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

வழக்கமாக கடைகளில் கிடைக்கும் நாப்கின்களிலும் டயாப்பர்களிலும் பிளாஸ்டிக் இருக்கும். இதனால் அவை மட்க அதிக காலம் பிடிக்கும். காகித எச்சத்தில் இருந்து உருவாக்கப்படும் செல்லுலோஸ் கூழ் அதில் இருக்கும். அத்துடன் அவற்றை வெள்ளையாக்க குளோரின் பயன்படுத்தப்படும். அவை நச்சுகளை வெளியிடுபவை. மேலும் வழக்கமான நாப்கின்கள், பிளாஸ்டிக் மூலம் கிடைக்கும் பாலிபுரொப்பிலைனால் உருவான ஹைட்ரோபோபிக் தாளால் சுற்றப்பட்டிருக்கும். அதன்மூலம் உடல் அரிப்புகள் ஏற்படும்.

இயற்கையின் மீது கொண்ட ஆர்வம்

என்னுடைய தாயாருக்கு எனக்கு எப்போதும் வீட்டுப் பொருட்களையே தேர்வு செய்வார். இயற்கையின் மீது எனக்கு இயல்பாகவே நாட்டம் அதிகம். எனவே இயற்கையான முறையில் ஒரு தயாரிப்புகளை தயாரிக்க முடிவு செய்தேன். பி.எச்டி குறித்து யோசிக்கும்போது நாம் உருவாக்கும் செயல்திட்டம், பெண்களுக்குப் பயன்பட வேண்டும். அது இயற்கையைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் விளைவுதான் இந்த இயற்கை நாப்கின். இது சிப்பெட்டிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களிலும் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது” என்கிறார் ப்ரீத்தி ராமதாஸ்.

மாணவி ப்ரீத்திக்கு உதவிய வழிகாட்டி அறிவொளி தட்சணாமூர்த்தி பேசுகையில், பெண் விஞ்ஞானிகளுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதியுதவி வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். மாணவியின் முயற்சிக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவருடைய தயாரிப்பு வருங்காலங்களில் பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும்.