வனம் எங்கள் வாழ்விடம், எங்களையும் வாழவிடுங்கள்…

Read Time:8 Minute, 27 Second

கோவையில் காயங்கள், தந்தங்கள் உடைப்பு என எட்டு மணி நேரப் போராட்டம், சித்தரவதைக்கு பின்னர் பிடிப்பட்ட சின்னதம்பி யானை அமைதியாக காட்டுக்குள் சென்றது. இப்போது சின்னத்தம்பி யானையை தாய், குட்டி யானைகள் சுற்றி தேடிவருகிறது.

கோவையில் மலையடிவார கிராமங்களான பெரிய தடாகம், சின்னத் தடாகம், வரப்பாளையம், பன்னிமடை பகுதிகளை ஒட்டிய வனப் பகுதியில் காட்டு யானைகள் வாழ்கின்றன. காடுகளில் நிலவும் உணவு, குடிநீர்ப் பற்றாக்குறையின் காரணமாக யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வரும் சம்பவங்கள் நிகழும். பயிரிடப்பட்டுள்ள சோளம், வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும். யானைகளால் விவசாயப் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்படுவதாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து யானைகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கையை மேற்கொண்டது.

துடியலூர் அருகே சின்னத் தடாகம் சுற்றுப் பகுதியில் சுற்றிய காட்டு யானைகளான விநாயகன், சின்னத்தம்பியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த மாதம் யானை விநாயகனை வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பிடித்தனர். சுமார் 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மயக்கமடைந்த அந்த யானையை கும்கிகள், பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் லாரியில் ஏற்றினர். பின்னர் அதை முதுமலை சரணாலயத்திற்கு அனுப்பி வைத்தனர். கும்கியையும் மிரட்டிய விநாயகன் யானை இது என்னுடைய இடம் இங்கிருந்து நான் செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கும் வகையில் மயக்க நிலையிலும் நின்றது. கும்கிகள், பொக்லைன்கள் மூலம் விநாயகன் கட்டுப்படுத்தப்பட்டது. யானை லாரியில் செல்லும் போது அங்கிருந்த மக்களை நோக்கி மெல்ல தன்னுடைய துதிக்கையை உயர்த்தி போய் வருகிறேன் என்று சொல்லும் வகையில் சோதனையுடன் சென்றது.

அப்போது அப்பகுதி மக்கள் பெரும் சோகம் அடைந்தனர். அவர்கள் பேசுகையில் பருவ காலங்களில் அவ்வப்போது யானைகள் வரும், ஆனால் உயிரிழப்பு எதையும் ஏற்படுத்தாது. பின்னர் அதுவாகவே காட்டுப்பகுதிக்குள் சென்றுவிடும். இப்பகுதியில் 25 வருடங்களாக சுற்றி வந்தது. இப்போது, வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு செங்கல் சூளைகளுக்காக மண் எடுக்கப்படுவதால் வழித்தடம் மாறுகிறது, இதனால் யானைகள் ஊருக்குள் வரும் நிலை ஏற்படுகிறது என்றனர்.

சின்னத்தம்பி எப்படி

பெரும்பாலும் யானைகளுக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெயர் சூட்டுவது வழக்கமான ஒன்றாகும். இதில், 15-20 வயது மதிக்கத்தக்க சின்னத்தம்பி யானைதான் மிகவும் பிரபலம். ஆரம்பத்தில் பெரியதம்பியுடன் சுற்றிவந்த சின்னத்தம்பி பின்னர் தனிக்காட்டு ராஜாவாகச் சுற்றியது. பார்க்கக் கம்பீரமான தோற்றமாக இருந்தாலும், இதுவரை ஒருவரைக் கூட சின்னத்தம்பி தாக்கியதில்லை. ஆனால், உணவுக்காக விவசாய நிலம், வீடுகள் என்று அனைத்து இடங்களிலும் நுழைந்துவிடும்.

விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தாலும், ரசிகர் மன்றம் தொடங்கும் அளவுக்கு சின்னத்தம்பி இந்தப் பகுதியில் பிரபலம். மனிதர்கள் நேருக்கு, நேராக வந்தால் கூட தாக்காத சுபாவம் கொண்டது சின்னத்தம்பி. இங்குள்ள பழங்குடி மக்களால் காட்டு ராஜா என்ற அன்புடன் அழைக்கப்படும். யானையின் மீது மக்களும் அதிக பிரியம் கொண்டிருந்தார்கள்.

சித்தரவதை

விநாயகன் எளிதில் பிடிபட்ட நிலையில் சின்னதம்பியோ பெண் யானை மற்றும் குட்டியுடன் வலம் வந்தது. கடந்த 25-ம் தேதி நீண்ட போராட்டத்திற்கு பிறகு சின்னதம்பியை வனத்துறையினர் பிடித்துச்சென்றனர். சின்னதம்பியை வனத்துறையினர் நெருங்கும் போது, குட்டியை பிடிக்க வருவதாக நினைத்து 2 யானைகளும் ஆக்ரோஷமாகியது. குட்டியானையை முன்னாள் தள்ளிக்கொண்டு சின்னதம்பியும், பெண் யானையும் சென்றது. அப்போது சின்னதம்பிக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. இதனையடுத்து யானையை பிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும், அதனால் யானை எதிர்க்கொண்ட வலியையும் வார்த்தையால் விவரிக்கவே முடியாது.

தந்தம் உடைந்து, ரத்த காயங்களோடு சின்னதம்பியை வனத்துறையினர் பிடித்துச்சென்றது காண்போரை கலங்கச்செய்தது.

விநாயகன் யானை பிடிபட்ட நிலையில் தற்போது அதனுடைய கூட்டாளியான சின்னதம்பி யானையும் வனத்துறை பிடித்து முதுமலையில் விட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதுதொடர்பாக கண்ணீர் மல்க பேட்டியளிக்கும் மக்கள், யானைகளை இங்கேயே கொண்டுவந்து விடனும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். யானை தன்னுடைய இடத்தில் இருந்து செல்ல மறுத்து மேற்கொண்ட போராட்டம், கும்கிகளின் தாக்குதல் என அங்கிருந்தவர்கள் அனைவரையும் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது. யானைகளை பிடிக்க சொன்ன விவசாயிகளுமே அழுதுவிட்டனர். அவ்வளவு வேதனையுடன் முதுமலை சென்ற சின்னதம்பி, லாரியிலிருந்து இறங்கியதும் யாரையும் தாற்க முற்படவில்லை.

தாய், குட்டி யானைகள் வேதனை

இந்நிலையில், சின்னதம்பியை தேடும் வகையில் பெண் யானையும், அதன் குட்டியும் சுற்றி வருகிறது. சின்னதம்பி வழக்கமாக சுற்றிவரும் இடங்களுக்கெல்லாம் இரு யானைகளும் சென்று வருவது காண்போரை கலங்க செய்கிறது. சின்னதம்பியை பிரிந்ததால் மிகுந்த ஆக்ரோஷத்துடன் கணுவாய், வரப்பாளையம், பன்னீமடை போன்ற பகுதிகளில் இரு யானைகளும் சுற்றி வருகின்றன. அதனை பார்க்கும் அந்த பகுதி மக்கள் யானை என்றாலும் அதற்கும் குடும்பம் உண்டுதானே என கேள்வி எழுப்புகின்றனர். கோவை சின்னத்தம்பி யானையை இடமாற்றம் செய்ததற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சின்னத்தம்பி யானையை, அதன் உறவுகளிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டுள்ளது என வேதனையை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இப்போது யானைகளை விரட்டுவதால் மீதமுள்ள கனிம வளங்களைக் கொள்ளையடிக்க சிறப்பாக செயல்படுகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. 100 அடி ஆளம் வரையில் செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்கப்படுவது ஏன்? என்ற கேள்வியை அப்பகுதி இளைஞர்கள் முன்வைக்கிறார்கள். யானைகளின் போராட்டம் “இது எங்கள் இடம், எங்களையும் வாழ விடுங்கள்,” என்றுதான் அமைந்தது.