சென்னை பள்ளி மாணவர்கள் உருவாக்கிய போக்குவரத்தை சீர்செய்யும் ‘ரோடியோ’ ரோபோ…!

Read Time:3 Minute, 50 Second

ரோபோவைப் பற்றிப் படிக்க வயது வரம்பு ஏதும் உள்ளதா? என்ற கேள்விக்கே இடமில்லாத வகையில் மாணவர்களின் சாதனை இருக்கிறது. அந்தவகையில் மாணவர்கள் இப்போது தயாரித்துள்ளது போக்குவரத்தை சீர்செய்யும் ‘ரோடியோ’ ரோபோ… முன்பெல்லாம் ரோபோ என்றால் அமெரிக்கா, ஜப்பான் போன்ற மேலை நாடுகள்தான் நம்முடைய கண் முன்னால் வரும் ஆனால் இப்போது சென்னை போன்ற நகரங்களிலும்கூட ரோபோக்களை வடிவமைக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இப்போது சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களிலுள்ள வேறுபட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இணைந்து ‘ரோடியோ’ என்னும் போக்குவரத்து விழிப்புணர்வையும், பணிகளையும் செய்யும் ரோபோவை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். துறைசார்ந்த வல்லுநர்களின் மேற்பார்வையில் முழுக்க முழுக்க ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையிலான மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோட்டை ஏற்கனவே சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் ஏற்றுக்கொண்டு பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

போக்குவரத்துத் துறையில் ரோடியோவின் பங்களிப்பு என்ன தெரியுமா? சிக்னலில் மக்கள் காத்துக் கொண்டிருக்கும்போது, ‘மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, போக்குவரத்து விதிகளை மதித்து செயல்பட வேண்டும், போன்ற விழிப்புணர்வு காணொளியை ஒளிபரப்புவது, வாகனங்களை நிறுத்தி, மக்கள் சாலையைக் கடக்க உதவுவது’ போன்ற உதவிகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

SP Robotic Works நிறுவனத்தின் மாணவர்கள் தரப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 2012-ல் தொடங்கப்பட்ட நிறுவனம், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அதோடு பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா என இந்தியா முழுவதும் 65 கிளைகளுடனும், ஆஸ்திரேலியாவிலும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் அணியின் வழிகாட்டியான சந்திரகுமார் பேசுகையில், “11 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரோபோடிக்சை கற்றுக்கொள்வதற்கு நாங்கள் பரிந்துரைத்தாலும், எங்களது மையத்தில் 7 வயது குழந்தைகள் கூட பயின்று வருகின்றனர். ஏழு வயது சிறுவர்கள் முதல் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரை என எங்களிடம் முப்பது ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பயின்று வருகிறார்கள். ரோபோடிக்ஸ் மட்டுமின்றி, IoT என்னும் பொருட்களின் இணையம், VR என்னும் மெய்நிகர் தொழில்நுட்பம் போன்றவை குறித்து அடிப்படை முதல் சமீபத்திய மேம்பாடுகள் வரை சொல்லி தருகிறோம்.

ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்கள் தங்களாவே கற்றுக்கொள்ளும் வகையில் அனிமேஷன் காணொளிகளை அடிப்படையாக கொண்ட அமைப்புமுறையுடன் செயல்முறை விளக்கத்துடன் கூடியதாக எங்களது பயிற்சி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார். புனே நகரில் கடந்த ஜனவரி 15-ம் தேதி ரோடியோ ரோபோ அந்நகர காவல்துறை அதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.