பா.ஜனதா அஸ்திரமாகும் அயோத்தி…! இப்போது நடப்பது என்ன? ஒரு பார்வை

Read Time:10 Minute, 2 Second

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ராமர் கோவில் பிரச்சினை தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பகிர்ந்துகொள்ளும்படி உத்தரவிட்டது. சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா மற்றும் ராம் லல்லா என்ற அமைப்புகள் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல்சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விசாரணை வெவ்வேறு காரணங்களால் தொடர்ந்து காலம் தாழ்ந்து செல்கிறது.

பா.ஜனதாவிற்கு எதிர்ப்பு அதிகரிப்பு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்பது பா.ஜனதாவின் வாக்குறுதிகளில் முக்கியமானது. ஆனால் 2014-ல் மத்தியில் ஆட்சியமைத்த பின்னரும், 2017-ல் உத்தரபிரதேசத்தில் ஆட்சியமைத்த பின்னரும் அதற்கான நடவடிக்கையில் எந்த நகர்வும் இல்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிற்காக காத்திருக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்தது. 2019 தேர்தல் நெருங்கும் நிலையில் கோவில் கட்டப்படாத விவகாரம் பா.ஜனதாவிற்கு எதிராக எழுந்துள்ளது.

விசுவ இந்து பரிஷத், சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதை வலியுறுத்தும் விதமாக அயோத்தி நகரில் பிரமாண்ட மாநாட்டை விசுவ இந்து பரிஷத் நவம்பரில் நடத்தியது. இந்து அமைப்புக்கள் அனைத்தும் கலந்துக்கொண்டது. மாநாட்டில் மத தலைவர் ராம்ஜி தாஸ் பேசுகையில், “பிரயாக்ராஜில் நடைபெற உள்ள கும்பமேளாவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் தேதி அறிவிக்கப்படும்,” என்றார். இப்போது கும்பமேளா நடக்கிறது.

ராமர் கோவில் விவகாரத்தை தேர்தல் வரை உயிர்ப்புடன் வைத்திருக்க பாஜக விரும்புகிறது என சாமியார்கள் தரப்பில் விமர்சனமும் செய்யப்பட்டது.

பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினை ஒவ்வொரு தேர்தலின் போதும் எழுகிறது. தேர்தல் முடிந்ததும் அது மறந்து போகிறது. மத்தியில் மோடி அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. 4½ ஆண்டுகளாக ராமர் கோவில் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் மூலம் மோடி அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருப்பதை உணர முடிகிறது. இந்த கும்பகர்ண தூக்கத்தில் இருந்து அரசை எழுப்ப எங்களது கட்சி சார்பில் போராடி வருகிறோம். பல்வேறு பிரச்சினைகளை அவசர சட்டம் ெகாண்டு வந்து மத்திய அரசு தீர்த்து வைத்துள்ளது. ஆனால் ராமர் கோவில் கட்டும் பிரச்சினையில் அதேபோல நடந்து கொள்ளாதது ஏன்? என கேள்வியை எழுப்பியது.

தேர்தல் தோல்வி

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 3 மாநிலங்களில் ஆட்சியை பா.ஜனதா பறிகொடுத்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி முதன்முறையாக ஜனவரி 1-ல் பேசுகையில், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பிறகே சட்டம் கொண்டுவரப்படும் என்றார். இது தொண்டர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

உ.பி.யில் கூட்டணி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படாத நிலையில் உ.பி.யில் கூட்டணி கணக்கும் பா.ஜனதாவிற்கு எதிராக எழுந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில், மோடி அலை, காங்கிரஸ் எதிர்ப்புக்கு மத்தியில் 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் 2014-ம் தேர்தலில் பா.ஜனதா 73 தொகுதிகளை வென்றதால் ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு முக்கியத்துவம் இல்லாமல் சென்றது. 2019 தேர்தல் பா.ஜனதாவிற்கு பெரும் சவால் எழுந்துள்ளது. மாநிலத்தில் பெரும் கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியும் பா.ஜனதாவிற்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளது. இதனால் பா.ஜனதாவின் வெற்றி கணக்கு சரியும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையே மாநில கட்சிகள் நிராகரிப்பை அடுத்து திடீரென காங்கிரஸ் பிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டுவந்துள்ளது. பா.ஜனதாவிற்கு எதிராகவே அனைத்து நகர்வும் உள்ளது.

மத்திய அரசு திடீர் நடவடிக்கை

இந்நிலையில் அயோத்தியில் கூடுதலாக கையகப் படுத்திய 67 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

1991-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அயோத்தியில் பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றிலும் உள்ள 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. இதில் ராமஜென்ம பூமி நியாஸ் என்ற ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட இந்து அறக்கட்டளை தனக்கு சொந்தமான 42 ஏக்கர் கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டு விண்ணப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக அந்த அமைப்பு விண்ணப்பித்துள்ளது.

எனவே கூடுதலாக கையகப்படுத்திய நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கலாம் என்ற முடிவை மத்திய அரசு முக்கிய கொள்கை முடிவாக எடுத்துள்ளது. 1994-ம் ஆண்டு இது தொடர்பாக இஸ்மாயில் பரூக்கி என்பவர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு கையகப்படுத்திய நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க விரும்பினால் அதனை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

ஆனால் 2003-ம் ஆண்டு அயோத்தி வழக்கில் கையகப்படுத்தப்பட்ட நிலம் அதே நிலையில் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே இப்போது பிரச்சினைக்குரிய நிலம் தவிர அதனை சுற்றியுள்ள கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ராமஜென்ம பூமி நியாஸ் அறக்கட்டளைக்கும், மற்ற உரிமையாளர்களுக்கும் திரும்ப வழங்க ஏதுவாக 2003-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறவோ அல்லது திருத்தி அமைக்கவோ வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன. நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கினால் இது ராமர் கோவில் கட்டுவதற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. மத்திய பா.ஜனதா அரசின் இந்த முடிவு தொண்டர்களை உற்சாகப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விஸ்வ இந்து அமைப்பு வரவேற்றுள்ளது. ” மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் மிக விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன்” என விஸ்வ இந்து அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, “பிரச்சினைக்குரிய நிலம் 0.313 ஏக்கர் தான். இதில் மத்திய அரசு கைவைக்காது. இதுதொடர்பான வழக்கில் இன்னும் முடிவு எட்டவில்லை. கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 42 ஏக்கர் ராமஜென்ம பூமி நியாஸ் அறக்கட்டளைக்கு சொந்தமானது. அரசு நிலத்தை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்ததால், அவர்கள் அங்கு ராமர் கோவில் கட்ட விரும்புகிறார்கள்” என்று கூறியுள்ளார். 2019 தேர்தலை குறிவைத்தே மத்திய அரசு இந்நகர்வை முன்னெடுத்துள்ளது என பல்வேறு தரப்பில் விமர்சனம் செய்யப்படுகிறது.