மதுரை மாநகராட்சி பள்ளியில் ‘ரோபோட்டிக்’ ஆய்வகம்

Read Time:2 Minute, 29 Second

தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ‘ரோபோட்டிக்‘ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை தத்தனேரி மாநகராட்சி திரு.வி.க.மேல்நிலைப்பள்ளியில் ‘ரோபோட்டிக்‘ ஆய்வகம் ரூ.13 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியும், அமெரிக்கன் இந்தியா நிறுவனமும் சேர்ந்து இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த ஆய்வகத்தில் 10 ரோபோக்கள், 10 மடிக்கணினிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

6–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரோபோ மூலம் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக ‘ரோபோட்டிக்‘ அனுபவம் உள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வகத்தில் ஒவ்வொரு ரோபோ எந்திரமும், தனித்தனி மடிக்கணியில் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த மடிக்கணியில் மாணவர்கள் வழங்கும் உத்தரவை ஏற்று ரோபோ எந்திரங்கள் செயல்படும். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு வசதியாக மொழிப்பாடங்களற்ற பிற பாடங்களை ஆடியோ மற்றும் வீடியோவாக நவீன டிஜிட்டல் முறையில் இந்த நிறுவனம் வழங்குகிறது.

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் தற்போதைய தொழில்நுட்ப காலத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில் ‘ரோபோட்டிக்‘ ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் தான் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியை சுற்றியுள்ள பிற பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. பிற பள்ளிகளிலும் வருங்காலங்களில் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெம் கல்விமுறை (STEM Education – Science Technology Engineering and Mathematics Education) ஒருபகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களும் ரோபோட்டிக் படிப்புகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.