ஆலங்குளம் டாஸ்மாக்கில் கல்லூரி மாணவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை…

Read Time:4 Minute, 57 Second

ஆலங்குளம் டாஸ்மாக் பணியாளர்கள் கல்லூரி மாணவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. காளத்திமடம் கிராமத்தின் அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆலங்குளம் டாஸ்மாக் கடையில் மதுபானங்களை மாணவர்களுக்கு விற்பனை செய்வது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. மாணவர்கள் புத்தகம் மற்றும் மதுபானங்களும் சைக்கிள் செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. மதுபான கடையில் அவர்களுடைய நண்பர் மூலம் வாங்கியதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் மதுபானங்களை எடுத்துச் செல்லும் புகைப்படம் எல்லை பாதுகாப்பு படை விஜய்குமாரால் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஜயகுமார் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், “டாஸ்மாக்கில் பணிபுரியும் பணியாளர்கள் வயது வரம்பின்றி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மதுபானங்களை விற்பனை செய்ய நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். கடையை மூடவில்லை என்றால் ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையும் மதுபான கடைகள் சீரழித்துவிடும் என அஞ்சுகிறேன். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தேர்தலின்போது மதுபானங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதனை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்,” எனக் கூறியுள்ளார்

உச்சநீதிமன்ற உத்தரவு மீறல்?

ஆலங்குளம் பகுதியில் இப்போது 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆலங்குளம் மேற்கு பகுதியில் ஒரு கடையும், ஆலங்குளம்-புதுப்பட்டி சாலை மற்றும் ஆலங்குளம்-அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலை பகுதியில் இரு கடைகள் செயல்படுகிறது. ஏற்கனவே, ஆலங்குளம் நெடுஞ்சாலை பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு எழுந்ததால் கடை மூடப்பட்டது.

இப்போது காளத்திமடம் கிராமம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது. புதியதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடை ஆலங்குளம்-அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலையில் இருந்து 75 மீட்டர் தொலைவில் உள்ளது என சமூக ஆர்வலர் திராவிடமணி குற்றம் சாட்டியுள்ளார். டாஸ்மாக் அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி உள்ளனர். புதியதாக திறக்கப்பட உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளது என்பதை காட்ட 250 மீட்டர் என தவறாக மார்க் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் நெடுஞ்சாலையில் இருந்து 75 மீட்டர் தொலைவில் உள்ளது.

புதிய கடை திறப்பதற்கு அனைத்து நிலைகளிலும் எதிர்ப்பை பதிவு செய்து போராட்டம் நடத்துவோம் என கூறியுள்ளார்.

பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக டாஸ்மாக் மாவட்ட நிர்வாகி வடமலை முத்து இந்தியன் எக்ஸ்பிரசிடம் பேசுகையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ள புதிய கடை 2 அல்லது 3 நாட்களில் நாட்களில் திறக்கப்படும் எனக் கூறியுள்ளார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில் அவ்வாறு விற்பனை செய்யக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு அனைத்து கடைகளுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகரன் “புதியதாக திறக்கப்பட உள்ள கடை விவகாரத்தில் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை மறு ஆய்வு செய்வேன், தேவையான நடவடிக்கையை மேற்கொள்வேன்,” என கூறியுள்ளார்.