எண்டோசல்பான் எமன்… மூன்றாம் தலைமுறைக்கூட இன்னும் பேரழிவின் வடுக்களைச் சுமக்கிறது…!

Read Time:11 Minute, 12 Second

இந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன மனிதர்கள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான் ‘பூச்சிக்கொல்லி…’ ஆனால், அவைகள் யாருக்கு கொல்லி வைக்கிறது என்றால் அதனை தயாரிக்கும் மனிதர்களுக்கும்தான் என்பதை புரிந்துக்கொள்ள முயற்சி செய்வது கிடையாது. உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான்.

பூச்சிகளை அழிக்க மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு, இன்று மேலும் விஷமாகி செல்கிறது. இப்போது கேரளாவில் பெரும் அழிவை ஏற்படுத்திய எண்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லியைவிடவும் மோசமான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது.

கல்வியறிவு, இயற்கை பாதுகாப்பு என எல்லாவிதத்திலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டது கேரள அரசு என்று சொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் 70-களில் கேரள அரசு செய்த மிகப்பெரிய தவறு இன்றளவும் மக்களின் மீது வடுக்களாக இருக்கிறது. அப்போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பெயர்களில் முந்திரித் தோட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் தெளிப்பது என்ற முடிவு செய்தது.

பசுமை புரட்சி அறிமுகமான காலம் அதுவாகும். ரசாயன உரங்கள், களைக்கொல்லி, பூச்சிக் கொல்லிகள் என்று அனைத்து விஷங்களும் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் சந்தையை ஆக்கிரமித்தக் காலமாகும். இவை அனைத்தும் நாட்டின் உற்பத்தியை பெருக்க தேவை, தேசத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியம் என்றெல்லாம் கூறப்பட்டு நிலம், நீர், காற்று என சுற்றுசூழலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்றும் தொடர்கிறது.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் 4,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள முந்திரித் தோட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டது. இந்த முந்திரித் தோட்டங்கள் அனைத்தும் ‘ பிளான்டேசன் கார்பரேஷன் ஆப் கேரளா’ என்ற அரசு நிறுவனத்துக்கு சொந்தமானது. கேரள அரசின் அறிவியல் மற்றும் விவசாய மேலாண்மை அமைப்பு, பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல், ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் தெளிக்க பரிந்துரைத்திருந்தது.

பயிர்களில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக வான்வழியாக பூச்சிக் கொல்லியான எண்டோசல்பானை தெளிக்கிறது. சுதந்திர இந்தியாவிலேயே முதன்முறையாக வான்வழியாக தெளிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி எண்டோசல்பானாகதான் இருக்கும். முதலில் இது வளர்ச்சி என்று பார்க்கப்பட்டது. முந்திரி செடியில் இருந்த பூச்சிகள் செத்து மடிந்தன. கேரள தோட்ட கழகத்தில் வேலைப் பார்த்த விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை.

என்டோசல்பான் தெளிப்பதற்கு முன், நீராதாரங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறப்பு உடை எதுவும் வழங்கப்படவில்லை. முறையான எந்த பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றாமல், சுமார் 24 ஆண்டுகள் எண்டோசல்பான் தெளிக்கும் வேலையை கேரள அரசு செவ்வனே செய்தது. வருங்கால சந்நதியினரையும் சத்தமில்லாமல் அழிக்கும் பணியையும் செய்தது. காற்றில் ஊடுருவிய எண்டோசல்பான் அதன் வேலையை காட்ட ஆரம்பித்தது.

நீராதாரங்கள் பாதிக்கப்பட்டது. யானைகள் நிறைந்த காசர் கோடு மாவட்டத்தில் அவை மறைய ஆரம்பித்தன. மான், கரடி, குரங்குகள் வனவிலங்குகள் செத்து மடியத் தொடங்கின. ஏன் பாம்புகளை கூட அந்த பகுதியில் பார்க்க முடியவில்லை. குழந்தைகள் மட்டும் ஊனத்துடன் பிறக்கவில்லை. கால்நடைகள் கூட ஊனத்துடன் பிறக்க ஆரம்பித்தன. மக்களுக்கு நேரிட்ட பாதிப்புகளை பட்டியலிட முடியாதவகையில் அனைத்துவிதமான பாதிப்புகளும் வந்தது. எண்டோசல்பானால் பெரிதும் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். மன வளர்ச்சி குன்றி, உடல் சிதைத்து, பார்வையற்று பல குழந்தைகள் பிறந்தன.

அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 613 பேர் தலை பெரியதாகவோ அல்லது ஏதோ ஒரு குறைபாட்டுடனோ உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. இதனையடுத்து கடந்த 2002-ம் ஆண்டு காசர்கோட்டில் எண்டோசல்பான், ஹெலிகாப்டர் வழியாக தெளிப்பது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு வன உயிர்கள் திரும்ப தொடங்கியது.

இதற்கு அடுத்தப்படியாக சட்டப்போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து, ‘எண்டோசல் பான்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு கடந்த 2011, மே 13-ம் தேதி உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. கேரள அரசும் அதை ஏற்றுக்கொண்டு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கை வெளியிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் 2017 ஜனவரியில் நிதி நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இன்று வரையில் கொடுக்கப்படவில்லை. கேரளாவில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை.

தேர்தல் காலத்தில் அனைத்து கட்சிகளும் ‘எண்டோசல்பானால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’ என்று சொல்லும். ஆனால், எது அவர்களை தடுக்கிறது என்று தெரியவில்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளாகப் மக்கள் போராடிதான் வருகிறார்கள். இப்போது கேரள தலைமை செயலகம் வெளியே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

எண்டோசல்பானால் உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம், நிரந்தர படுக்கை நோயாளிகளுக்கு ரூ. 5 லட்சம், சிறிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இறந்தவர்களின் குடும்பத்து. ரூ. 1.5 லட்சமே நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர படுக்கை நோயாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும், ஊனமுற்றவர்களுக்கு ரூ. 2 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடும் அவர்கள், நிதியுதவி, மருத்துவ உதவி மற்றும் பாதிக்கப்பட்ட எங்களுடைய குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகள், இதுபோன்ற கொடூரமான விளைவை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக வழக்கை முன்னெடுக்க தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாத வரையில் இங்கிருந்து திரும்ப மாட்டோம் என்று கூறியுள்ளனர். மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இன்று மூன்றாவது தலைமுறைவரையில் குழந்தைகள் பாதிப்புடனே பிறக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்கிறது. கேரள அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையே வலுக்கிறது.

உணவில் விஷம்

இன்று மனித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிக்கொல்லிகளும் ஒரு காரணம். மீண்டும் மீண்டும் வளர்ச்சி என்ற பெயரில் நம்மை ஏமாற்றிக் கொள்ளாமல், விஷங்கள் இல்லாத விவசாயத்தை முன்னெடுப்பதுதான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசின் கடமையாக இருக்க வேண்டும். 2015-ல் கேரள விவசாய பல்கலை கழக சோதனையில் தமிழகத்தில் இருந்து காய்கறிகளில் 40 வகை பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. , தமிழக விவசாயிகளின் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை கட்டுப்படுத்தாத பட்சத்தில் அது இருமாநில மக்களையும் பாதிக்கும் என்று கேரளா கூறியது.

விவசாயிகள் பூச்சிகளை அழிக்க ஒவ்வொரு முறையும் மருந்து தெளிக்கும் அளவை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவையுள்ளது.

மத்திய அரசு எண்டோசல்பான் பூச்சிக்கொல்லிக்கு தடை விதித்த பிறகு பிற மாநிலங்கள் அடம்பிடித்த சூழலில், தமிழகத்தில் உடனடியாக தடையை துணிச்சலாக அமல்படுத்தியவர் ஜெயலலிதா. பூச்சிக்கொல்லி இல்லாத தமிழகம் என்ற அவருடைய இலக்கை அடையும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் இப்போது இயற்கை விவசாயம் மீது நாட்டம் அதிகமாக உள்ளது. இதில் வெற்றியையும் விவசாயிகள் பார்த்து வருகிறார்கள். இதனை விஸ்தரிக்க வேண்டிய கடமை அனைவரது மத்தியிலும் உள்ளது. அடுத்த தலைமுறையினருக்கு சுகாதாரமான சுற்றுசூழலை கொடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடத்திலே உள்ளது.