அன்பின் திருவிடம் உமையவள் கோமதியின் தரிசனம்…

Read Time:12 Minute, 34 Second

அன்பின் திருவிடம்;
பண்பின் உறைவிடம்;
சாந்தியின் இருப்பிடம்;
சந்தோஷத்தின் பிறப்பிடம்!

என்றால் உமையவள் கோமதிதான். தேவர்கள் மலர் தரும் விருட்சங்களாகவும், தேவமாதர்கள் ஆநிரைகளாகவும் தோன்றிய திருவிடமே சங்கரன்கோவில் என்னும் புண்ணியத்தலம்…! கோவிலுக்கு சென்றதும்125 அடி உயரத்தில் 9 நிலைகள் கொண்ட இராஜகோபுரம் அம்மையும், அப்பனும் அழைப்பது போன்று நம்மை வரவேற்கிறது. சில்லென்று வீசும் காற்றும், கலைநயமிக்க சிற்பங்கள் என கோவிலில் எங்கு சுற்றிலும் அழகு நிறம்பி இருக்கிறது. அழகுமட்டுமல்லை, அன்னை கோமதியின் அன்பும்தான்.

பள்ளியில் தமிழ் பாடங்கள் நடத்தும் போது ஆசிரியை சிவன், பார்வதையின் கதைகளை சொல்லும் போது உடல் சிலிர்க்கும். கோவிலுக்குள் சென்றும் அவை அனைத்தும் நம்முடைய மனதிற்குள் வந்து செல்லும். குழந்தையாகவே நம்மை நாம் உணரும் போது அன்னை உமையவள் கோமதி எங்கேயோ ஒழிந்து விளையாடுகிறாள் போன்றே தோன்றும். அவளைத் தேடி செல்கையில் துய மணிகளை கொண்ட கொலுசு சத்தமும், வளையல் சத்தமும், சிரிப்பு சத்தமும் மட்டுமே கேட்கும்.

சங்கரலிங்கம், சங்கரநாராயணரை தரிசனம் செய்யும் வகையில் உமையவளை எப்போது பார்ப்போம் என்றுதான் தேடிச்செல்லும் கண்கள். கோமதியை இறுதியாக பார்க்கையில் மனம் முழுவதையும் ஆட்கொண்டுவிடுவாள். அவள் முகம் மட்டும்தான் நெஞ்சமெல்லாம் நிறைந்து இருக்கும். நம் கைகளை பிடித்து வழிநடத்திச் செல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். கோவிலில் இருந்து திரும்புகையில் போய் வருகிறேன் என்று சொல்ல மனம் வராமல், உன்னுடனே இருக்கட்டுமா? என்கூட வருவாயா? என்றுதான் அவளை நோக்கி கேட்கத்தோனம். சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் கோமதியை தரிசனம் செய்ய சங்கரன்கோவிலுக்கு சென்று வருவோம்.

கோவில் அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து வடமேற்கே 48 கிலோமீட்டர் தூரத்தில் சங்கரன்கோவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, மதுரை, விருதுநகரில் இருந்து பஸ் போக்குவரத்து இருக்கிறது. மதுரையில் இருந்து ரெயில் மூலமாக சங்கரன் கோவில் செல்லலாம். தென்காசியில் இருந்தும் ரெயிலில் செல்லலாம்.

திருக்கோவில் வரலாறு

தமிழகத்தில் உள்ள சிவத்தலங்களில் சங்கரநாராயண சுவாமி கோவில் பாண்டிய நாட்டின் நில தலமும் ஆகும். மதுரையை ஆண்ட உக்கிரமப்பாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில். மணிக்கிரீவன் என்ற காவலின் சொல் கேட்டு புன்னை வனத்தின் புற்றின் அருகே இருந்த புன்னை வனக்காட்டினை சீர் செய்து, கோவிலை கட்டியதுடன், கோவிலின் முன் மண்டபங்களையும் கட்டி சுற்றுச்சுவரையும் எழுப்பினார்.

அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன் கோவில். இக்கோவில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளப்படுவதை தடுத்து நிறுத்தவும், நாட்டில் இந்து மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தவும், பாம்பரசர்களான சிவ பக்தன் சங்கனும், விஷ்ணு பக்தன் பதுமனும் சேர்ந்து திருக்கயிலை மலையில் அருந்தவம் மேற்கொண்டனர். பாம்பரசர்களின் அருந்தவத்தை கண்ட பார்வதி தேவியார் பாம்பரசர்கள் முன்பாகத் தோன்றி என்னவரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர்கள் இருவரும் சிவன், விஷ்ணு இந்த இருவரில் உயர்ந்தவர்கள் யார் என்று வினா எழுப்பினார்கள்.

இதில் அம்பிகை யாரை உயர்ந்தவர் என்று கூற இயலும் தவித்தார். ஒருபுறம் கணவர் சிவபெருமான், மறுபுறம் சகோதரர் விஷ்ணு, இதற்கு தீர்வை அம்பிகை சிவபெருமானிடமே கேட்க, அதற்கு ஈசனோ பொதிகை மலைச் சாரலில் புன்னைவனத்தில் தவம் மேற்கொள் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று அம்பிகைக்கு அருளினார். அதன்படி உமையம்மை தமைசூழ்ந்த பசுக்களாகிய வேதமாதர்களுடன் பார்வதி தேவி கோமதியம்மை, ஆவுடையம்மை எனும் காரணப் பெயர்களை தாங்கி புன்னைவனத்தில் தவம் மேற்கொண்டார்.

அம்மையின் அருந்தவத்திற்கு இணங்கி சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராடம் நன்னாளில் அருள்தரும் கோமதி அம்பிகைக்கு அரியும், சிவனும் இணைந்த சங்கரநாராயணர் கோலத்தில் காட்சி கொடுத்து அருளினார். இந்த காட்சியைத்தான் ஆடித்தபசு திருவிழாவாக லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து இறையருள் பெற்று வருகின்றனர்.

சங்கர நாராயணர்

சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவி கோமதி அம்மனாகவும் வீற்றுள்ளார். புன்னை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட இந்தக் கோவில் ஒன்பது ராஜ கோபுரங்களைக் கொண்டது. சங்கரரும், நாராயணரும் ஒருவரே என்னும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியருளிய இந்தக் கோயிலில் சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே சங்கரநாராயணர் சந்நிதி அமைந்துள்ளது.

சங்கர நாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன், திருவாசியில் நாகவடிவில் சங்கன் குடைபிடிக்கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடைபிடிக்கிறான். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படும்.

கோமதியம்மை

அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம் உள்ளது. மனநோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம். கோமதி அம்மன் சந்நிதி முன் உள்ள ஸ்ரீசக்கரத்தில் பிணியாளர்கள், செய்வினைகளால் பாதிக்கப்பட்டோர் அமர்ந்து அம்மனை நோக்கித் தவம் செய்தால் அவையும் நீங்கும். சந்நிதியில் விபூதிப் பிரசாதம், துளசி தீர்த்தம் உண்டு, வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு, இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் இங்கு உண்டு.

அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவித்து அலங்காரம் செய்விக்கிறார்கள். அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திரதோஷம், நாகதோஷம் முதலியவை அகலும் என்று கூறப்படுகிறது.

தபசுக் காட்சி

ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடித்தபசு அன்று காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார்.

தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

மீண்டும் தவம்

பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்?. அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டுகிறாள். இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி- அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

நாகதோஷங்களை தீர்க்கும் ஸ்தலம்

தமிழ்நாட்டில் நாகதோஷங்களை தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குவதற்கு இக்கோவிலின் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் 6 அடி உயரத்தில் சர்ப்பத்தை கையில் பிடித்தபடி சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார்.

இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்தில் விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோயிலின் ஐதீகம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து அன்னை கோமதியின் அருள் பெற்று செல்கின்றனர்.

முக்கிய திருவிழாக்கள்

சித்திரைப் பெருந்திருவிழா – 48 நாட்கள்.
ஆடித்தபசு திருவிழா – 12 நாட்கள்.
நவராத்திரி லட்சார்ச்சனை – 9 நாட்கள்.
ஐப்பசி திருக்கல்யாணம் – 10 நாட்கள்.
கந்தசஷ்டி திருவிழா – 6 நாட்கள்.
திருவெம்பாவை திருவிழா – 10 நாட்கள்.
தை மாதம் கடைசி – ஆவுடைப்பொய்கை
வெள்ளி அன்று தெப்பத் தேரோட்டம்
ஸ்ரீநந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு – மாதம் 2 முறை.

புற்றுமண்தான் பிரசாதம்

சங்கரன்கோயில் பாம்புகள் (சங்கன், பதுமன்) வழிபட்ட கோவில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்துச் சாப்பிடுகின்றனர். மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்தப் பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. கோமதியின் அருள் பெறுவோம்.