மாயாவதியின் ரூ. 1400 கோடி ஊழல்…

Read Time:3 Minute, 22 Second

மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் முந்தைய ஊழல் வழக்குகளை மத்திய விசாரணை முகமைகள் கையில் எடுக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையில் 2007- 2012 வரையில் பகுஜன் சமாஜ் ஆட்சியின்போது ஏராளமான நினைவு மண்டபங்கள், அவரது கட்சி சின்னமான யானை சிலைகள், மாயாவதியின் சிலைகள் மற்றும் பூங்காங்கள் அமைக்கப்பட்டன. இதில் ஊழல் நடந்திருப்பதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. நினைவு மண்டபங்கள், பூங்காக்கள் கட்டியதில் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு தொகையில் 30 சதவீதம் அதாவது ரூ.1400 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

ரூ.1400 கோடி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த லோக் ஆயுக்தா பரிந்துரைத்துள்ளது. 2012-ல் சட்டசபைத் தேர்தலில் மாயாவதி கட்சி தோல்வியடைந்து, அகிலேஷ் யாதவ் முதல்வராக பொறுப்பேற்றதும், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான விசாரணையை அகிலேஷ் தீவிரப்படுத்தினார். பின்னர் கிடப்பில் போடப்பட்டது. இப்போது இவ்விவகாரத்தை அமலாக்கப்பிரிவு கையில் எடுத்துள்ளது.

ரூ. 1400 கோடி ஊழலில் அமலாக்கப்பிரிவு உத்தரபிரதேசத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது.

அகிலேஷ் யாதவ்

இதேபோன்று அகிலேஷ் யாதவ் மீதும் ஊழல் புகார் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். 2012 முதல் 2013-ம் ஆண்டு வரை சுரங்கத்துறை அவர் வசம் இருந்தது. அப்போது, கனிமங்கள் நிறைந்த மணல் சுரங்கங்களுக்கு அதிகாரிகள் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாகப் புகார் எழுந்துள்ளது. சுரங்கங்களுக்கு சில விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாகப் புகார் எழுந்தது. தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி மறுத்த மணல் சுரங்கங்களின் உரிமங்களை அரசு புதுப்பித்து அளித்தாகவும் புகார் எழுந்தது.

கடந்த 2016-ம் ஆண்டில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், சிபிஐ 7 முதல்கட்ட விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்தது. சுரங்க விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. . சமீபத்தில் டெல்லி, லக்னோ உள்ளிட்ட 14 இடங்களில் சிபிஐ சோதனை நடந்தியது. இவ்வழக்கில் அகிலேஷ் யாதவிடம் சட்டவிரோத சுரங்கம் குறித்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்ற செய்திகள் வெளியாகியது. 2019 தேர்தலில் கூட்டணி வைத்திருப்பதால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையென இருவர் தரப்பிலும் குற்றம் சாட்டப்படுகிறது.