பா.ஜனதாவிற்கு சிவசேனாவின் கூட்டணி அவசியம் ஏன்? விளக்கம்

Read Time:3 Minute, 47 Second

மத்தியிலும், மராட்டியத்திலும் உள்ள பா.ஜனதா அரசுக்கு சிவசேனா ஆதரவு அளித்து வருகிறது. மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா அரசில் சிவசேனாவிற்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் அமைச்சகத்தில் கிடைக்கவில்லை. பா.ஜனதா மற்றும் சிவசேனா இடையிலான மனக்கசப்பு பெரும் பிளவாக நீடித்து வருகிறது. இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவு தற்காலிகமா? நிரந்தரமா? என்பதை தெளிவாக கூறமுடியாத நிலையே நீடிக்கிறது.

கூட்டணி அவசியம் ஏன்?

1) 2019 தேர்தலில் மராட்டியத்தில் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பா.ஜனதாவிற்கு நிர்பந்திக்கப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது.

2) 48 தொகுதிகளை கொண்ட மேற்கு மாநிலமான மராட்டியம் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்திற்கு அடுத்தப்படியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

3) உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி பா.ஜனதாவிற்கான வாய்ப்பை சுருக்கியுள்ளது.

4) 2014 தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வைத்து 48 தொகுதிகளில் 41 தொகுதிகளில் வென்றது. மராட்டியத்தில் சிவசேனா 20 சதவித வாக்குகளை பெற்றது, 18 தொகுதிகளில் வென்றது. 2014 சட்டசபைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டது. பா.ஜனதா 122 தொகுதிகளிலும், சிவசேனா 63 தொகுதிகளிலும் வென்றது.

5) 2019 தேர்தலில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இது பா.ஜனதாவிற்கு சவாலாக அமையும்.

6) மராட்டியத்தில் இந்துத்துவா வாக்கை சிவசேனா தன்னுடைய பலம் கொண்டு பிரிக்கும்.

7) மராட்டியத்தில் பா.ஜனதா அரசுக்கு எதிராக பல்வேறு நிலைகளை எடுக்கும் சிவசேனா மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டியது கிடையாது.

8) இவையனைத்தும் சிவசேனாவை கூட்டணி வரிசைக்கு இழுக்க வேண்டும் என்பதை பா.ஜனதாவிற்கு முக்கியமானதாக்குகிறது.

9) இதுவரையும் சிவசேனா பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கவில்லை. பா.ஜனதாவும் தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்து சிவசேனாவை வெளியேற்றவும் இல்லை. இந்த விஷயத்தில் சில முக்கியக் காரணங்களால் இருவருமே முந்திக்கொள்ளவில்லை.

10) மராட்டியத்தில் தன் கட்சி எம்எல்ஏக்கள் பா.ஜனதாவிற்கு தாவி விடுவார்கள் என்ற பயம் சிவசேனாவிற்கு உள்ளது. தனியாக போட்டியென அறிவித்தால் சிவசேனாவுடனான கூட்டணிக்காக மிஞ்சியுள்ள கொஞ்சம் வாய்ப்பும் இழந்து விடுவோம் என பா.ஜனதா அஞ்சுகிறது. மாநிலத்தில் கூட்டணியென்பது இருகட்சிகளுக்குமே முக்கியமானது என்பதுதான் உண்மை. கூட்டணி அமையுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும். இதற்கிடையே நிதின் கட்காரியை பிரதமராக நியமனம் செய்ய வேண்டும் என சிவசேனா கேட்கிறது. இதனை பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஏற்குமா? என்பதும் ஐயத்திற்குரியது.