மத்திய பட்ஜெட் 2019: மாத சம்பளத்தாரர்களுக்கு ஜாக்பாட்…!

Read Time:3 Minute, 57 Second

2019 இடைக்கால மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளத்தாரர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி பட்ஜெட்டான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் பா.ஜனதா தலைமையிலான மோடி அரசு தாக்கல் செய்திருக்கிறது. 5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி, எதிர்க்கட்சிகள் கூட்டணி, விவசாயிகள் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் 2019 தேர்தலை மத்திய அரசு எதிர்க்கொள்ள உள்ளது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

தேர்தலையொட்டிய பட்ஜெட் என்பதால் பா.ஜனதா அரசும் அதிகமான அதிரடி அறிவிப்புகளை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படியே இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. முக்கிய அறிவிப்புகளை பார்க்கலாம்.

விவசாயிகளுக்கு

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் பா.ஜனதா அரசு தோல்வியை தழுவியதற்கு விவசாயிகள் பிரச்சனை முக்கியமாக கருதப்பட்டது. நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். நாங்கள் ஆட்சிக்குவந்தால் கடன் தள்ளுபடி என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். கிசான் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வட்டி மானியம் இரட்டிப்பாக்கபப்டும். விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

மூன்று தவணையாக வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாத சம்பளத்தாரர்கள்

கடைசி பட்ஜெட் என்பதாலேயே இதற்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்து பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தன. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரிச்செலுத்த தேவையில்லை! என்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருமான வரி உச்ச வரம்பு சலுகையானது ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிரந்தர கழிவு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வருமான வரிசலுகையால் 6.25 லட்சம் வரையில் இனி வருமான வரி கட்ட வேண்டிய தேவையில்லை. வங்கி வட்டியில் இருந்து வருமானத்துக்கு தனியாக 50 ஆயிரம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

வருமான வரித்துறை சலுகை 3 நடுத்தர குடும்பத்தினருக்கு பயனளிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அறிவிப்புகள் வெளியாகும் போது பா.ஜனதா எம்.பி.க்கள் மோடி! மோடி!! மோடி!!! என கோஷங்களை எழுப்பினர்.

பிஎப் சந்தாதாரர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ. 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.