45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை உயர்வு; சொல்வது என்ன?

Read Time:5 Minute, 41 Second

2017-18-ம் ஆண்டில் நாட்டின் வேலையின்மை அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக அதிகரித்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேசிய புள்ளியியல் ஆணையத்தின் செயல்தலைவராக இருந்த பி.சி. மோகனன் , உறுப்பினர் ஜே.மீனாட்சி ஆகியோர் கடந்த திங்கள்கிழமை தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த தங்களின் புள்ளிவிவர அறிக்கையை வெளியிட முறையான அனுமதி வழங்கப்படாத காரணத்தால் வேதனை அடைந்துள்ளதாகவும், இதை வெளியிட்ட அரசு தரப்பில் போதுமான ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும், மற்ற அரசு நிறுவனங்களின் தலையீடும் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்கள். இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெற்று காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது.

இந்நிலையில் தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் நடத்திய ஆய்வின் அறிக்கையை ஆய்வு செய்து வெளியிட்ட ‘பிஸ்னஸ் ஸ்டார்டு’ நாளேடு செய்தியை மேற்கோள்காட்டி ‘ராய்டர்ஸ்’ செய்தி நிறுவனம் செய்தியொன்றை வெளியிட்டது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18-ம் ஆண்டில் 6.1 சதவீதம் அதிகரித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலையின்மை அளவு என்பது கடந்த 1972-73-ம் ஆண்டு நிலவியதற்கு ஒப்பாகும் என்று பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-12-ம் ஆண்டில் வேலையின்மை அளவு 2.2 சதவீதம் இருந்த நிலையில், இளைஞர்களிடையே வேலையின்மை 13 முதல் 27 சதவீதம் உயர்ந்து 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வேலையின்மை அளவு 7.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் வேலையின்மை அளவு 5.3 சதவீதமாகவும் இருந்துள்ளது.

பிரதமர் மோடி கொண்டு வந்த கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து எடுக்கப்பட்ட முழுமையான ஆய்வு அறிக்கை என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது என்று ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீதம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய அரசு கூறினாலும், போதுமான அளவு இளைஞர்களிடையே வேலைவாய்ப்பை ஆண்டுதோறும் உருவாக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இம்மாத தொடக்கத்தில், ‘சென்டர் பார் மானிடரிங் இந்தியன் எக்கானமி’ எனும் ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு மட்டும் 1.10 கோடி வேலைவாய்ப்புகளை இழந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்…

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அளிப்பதாக மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், 5 ஆண்டுகள் ஆன நிலையில், வேலையில்லா திண்டாட்டம் தேசிய பேரழிவாக உயர்ந்துள்ளது. பொருளாதாரத்தையும் சீரழித்து விட்டார். மோடி, வீட்டுக்கு போக வேண்டிய நேரம் வந்து விட்டதோ? என கேள்வியை எழுப்பியுள்ளார்.

நிதி ஆயோக் விளக்கம்

வேலையின்மை தொடர்பாக வெளியான புள்ளி விவரங்கள் முழுமையானது அல்ல என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியதாவது: ‘‘வேலையின்மை தொடர்பாக வெளியான புள்ளி விவரங்கள் முழுமையானது கிடையாது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. மேலும் இந்த புள்ளி விவரங்கள் 2011 – 12-ம் ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுவது தவறானது’’ என தெரிவித்துள்ளார்

மத்திய அரசுக்கு அழுத்தம்

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தேசிய சாம்பிள் சர்வேயின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கை மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கையில், வேலைவாய்ப்பு தொடர்பாக முறையான தகவல் தரவுகள் யாரிடமும் இல்லை, இது போலியான பிரசாரம் என மத்திய அரசு கூறியது. இப்போது வேலையின்மை அதிகரித்துள்ளது என புள்ளிவிபரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.