விவசாயிகளுக்கு 16 ரூபாய் 50 பைசா…! ஏன் இந்த அவமதிப்பு?

Read Time:8 Minute, 9 Second

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 16 ரூபாய் 50 பைசா வழங்கப்படும் என மோடி அரசு அறிவித்துள்ளது. சுவாமிநாதன் ஆணைய பரிந்துரையை அமல்படுத்ததான் கேட்டோமே தவிர மாதம் 500 ரூபாயை கேட்கவில்லை என விவசாயிகள் கோபம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள 24.39 கோடி குடும்பங்களில், 17.91 கோடி குடும்பங்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். மேலும் அவர்கள் விவசாயத்தை சார்ந்தே வாழ்கின்றனர். இந்தியாவின் 2 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் 15 சதவீதம் விவசாய உற்பத்தியிலிருந்து வருகிறது. நாட்டின் தொழிலாளர்களில் 48.9 சதவீதம் விவசாயத்துறையில் இருக்கின்றனர். ஆனால், இந்தியாவின் விவசாயக் குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கடனில் இருக்கின்றனர். அதுதான் விவசாயிகள் தற்கொலைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

விளைப்பொருட்களுக்கு விலையின்மை மற்றும் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகள், விவசாய விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை (குறைந்தப்பட்ச ஆதார விலை), விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் அமல்படுத்தல் போன்ற கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன்வைக்கிறார்கள். போராட்டமும் நடந்துகிறார்கள்.

அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச விலையை அரசு தீர்மானிக்க வேண்டும். அந்த விலை, உற்பத்தி செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவீதம் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 16.40 அறிவிப்பு

விவசாயிகள் தங்களுடையை கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தும் மத்திய அரசு கண்டுக்கொள்வது கிடையாது. இந்நிலையில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சத்தீஷ்காரில் ஆட்சியை இழந்தது. இதற்கு விவசாயிகள் பிரச்சனையை கண்டுக்கொள்ளாததுதான் காரணம் என தெரியவந்தது. இதற்கிடையே மூன்று மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசு முக்கியமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் நேரிட்டது. அரசு ரூ. 4 லட்சம் கோடி வரையிலான விவசாயக் கடனை தள்ளுபடி செய்யலாம் என தகவல் வெளியாகியது. ஆனால் கடன் சுமை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இப்போது விவசாயிகளின் கோரிக்கைக்கு மாறான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2019 இடைக்கால பட்ஜெட்டில் Pradhan Mantri Kisan Samman Nidhi என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

விவசாயிகள் வேளாண் துறையில் அனுபவித்துவரும் சிரமத்தை கருத்தில் கொண்டு 2 ஹெக்டேர் நிலப்பரப்புக்கு குறைவாக வைத்திரு்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை ஆண்டுக்கு 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும். மத்திய அரசால் வழங்கப்படும் இத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும். இதனால் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என மத்திய அரசு கூறியுள்ளது. இத்திட்டத்திற்கு “ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும்” என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. வருடத்திற்கு 6000 ரூபாய் என்பது ஒரு நாளைக்கு 16 ரூபாய் 40 பைசாவாகும்.

காங்கிரஸ் விமர்சனம்

மத்திய அரசின் அறிவிப்பை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், “விவசாயிகளுக்கு ரூ. 6000 என்பது; அவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்படும் என்பதாகும். இது எப்படி அவர்கள் கவுரவமாக வாழ வழிவகைச்செய்யும்?” என கேள்வியை எழுப்பினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில் “5 ஆண்டுகளாக மோடி தலைமையிலான ஆட்சியின் திறமையின்மையாலும், ஆணவத்தாலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு நாளைக்கு விவசாயிகளுக்கு 17 ரூபாய் கொடுப்பது அவர்களை அவமதிக்கும், செயல்” என கூறியுள்ளார்.

மத்திய அரசின் 500 ரூபாய் அறிவிப்பு காயத்தின் மீது உப்பை தடவுவது போன்றது என்று விமர்சனம் செய்யப்படுகிறது.

ஏன் இந்த அவமதிப்பு?

தேர்தல் வாக்குறுதிகளில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மக்களைக் கவர்வதற்கான உத்தியே தவிர, அவர்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான திட்டம் கிடையாது. மாணவர்களுக்கும், மக்களுக்கும் அடிப்படையான உதவிகளை தரத்தோடு அரசுக்கள் செய்துக் கொடுக்கலாம். இலவசம் என்ற பெயரில் அரசின் நிதியை வீணாக்காமல் இருக்கலாம்.

2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்களை அறிவிப்பதும், வழங்குவதும் மக்களைக் கவர்வதற்கான முயற்சி என்றும், இது நேர்மையான தேர்தல் நடைமுறையை பாதிக்கும் எனவும் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இன்னும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இப்போது மத்திய அரசிடம் இருந்து ஒரு இலவச அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுதான் விவசாயிகளுக்கு மாதம் ரூ. 500 திட்டம். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை அவமதிக்கும் செயல் என்று விமர்சிக்கப்படுகிறது.

விளைபொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதாரவிலை, கடன் தள்ளுபடியை கோருகிறோம், ஆனால் ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்கி மாதம் 500 ரூபாயை தருவது என்பது ஏற்புடையது கிடையாது என விவசாயிகள் கூறுகின்றனர். சுவாமிநாதன் ஆணைய பரிந்துரையை அமல்படுத்துங்கள் என்கிறார்கள். “பிரதமர் மோடி அறிவித்த 6000 ரூபாயை அவரே வைத்துக்கொள்ளட்டும். விவசாயிகள் ஒன்றும் பிச்சையெடுக்கவில்லை. நாங்கள் சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளைதான் அமல்படுத்த வலியுறுத்துகிறோம். அதனை எங்களுக்கு செய்தாலே போதும், அதைவிட எதுவும் தேவையில்லை,” என்கிறார்கள்.

குறைந்தப்பட்ச ஆதாரவிலை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடியை கோரும் நிலையில் ரூ. 500 மாதம் வழங்கப்படுவது என்பது என்ன வகையில் நியாயம் என கேள்வியை எழுப்புகிறார்கள்.