விவசாயிகள் அமல்படுத்தக்கோரும் சுவாமிநாதன் ஆணைய பரிந்துரை என்ன?

Read Time:2 Minute, 52 Second

2004 நவம்பர் 18-ம் தேதி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் ‘தேசிய விவசாயிகள் ஆணையம்’ இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் 2004-ல் மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமைக்கப்பட்டது. விவசாயிகள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பல நல்ல பரிந்துரைகளையும் அந்த ஆணையம் வழங்கியது. அறிக்கையில் விவசாயிகளின் தற்கொலைக் கான காரணங்கள் ஆராயப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது உள்ளிட்டவைதான் தற்கொலைக்கான காரணங்கள் என்று பட்டியலிட்டது

அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச விலையை அரசு தீர்மானிக்க வேண்டும். அந்த விலை, உற்பத்தி செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவீதம் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும். அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் பயிர் காப்பீட்டு திட்டத்தை கிராமத்தை அளவீடாகப் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

விவசாய நிலங்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும். உச்சவரம்புக்கு மேற்பட்ட நிலங்கள், உபரி நிலங்கள், அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்கள் நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். விவசாயப் பிரதிநிதிகளும் இடம் பெறும் வகையில் மாநில அளவிலான விவசாயிகள் ஆணையங்கள் வேண்டும். விவசாய மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் ஆகியவை பரிந்துரைகளில் முக்கியமானவை.

மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்தஒரு சாதகமான நகர்வும் கிடையாது.2014 தேர்தலில் காங்கிரஸ் அரசு அறிக்கையை அமல்படுத்த முயற்சி எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டம் தவறாமல் மோடி பேசினார். பாஜக ஆட்சி அமைத்தால், சுவாமிநாதன் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும். விவசாயத்தில் 50 சதவீதம் லாபம் உத்தரவாதம், விவசாயிகள் தற்கொலை என்பது அறவே தடுக்கப்படும் என்று முழங்கினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. சுவாமிநாதன் ஆணைய பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.