டொனால்டு டிரம்ப் பொறியில் இந்திய மாணவர்கள் சிக்கியது எப்படி?

Read Time:6 Minute, 17 Second

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிப்பதாகக் கூறி, ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் போலி விசாவில் தங்கியிருப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். வெளிப்படையாகவே அகதிகள் விவகாரத்தில் கராராக நடந்துக்கொண்ட டிரம்ப் நிர்வாகம், மாணவர்கள் விவகாரத்தில் நூதன நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் விசா நீட்டிப்பு பெற வேண்டும் என்பதற்காக போலியான பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 129 இந்திய மாணவர்கள் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பொறியில் சிக்கியது எப்படி?

அமெரிக்காவில் மாணவர் விசாவை நீட்டித்தபடி சட்டவிரோதமாக தங்கி பணிபுரிபவர்களை பொறி வைத்து பிடிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை சார்பில் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் என்ற பெயரில் உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் போலியான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அங்கு பணத்தை கட்டிவிட்டு கல்வி பயிலாமல், வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

இந்த பல்கலைக்கழகங்களில் வழக்கமான பாடத் திட்டங்களோ, வகுப்புகளோ இருக்காது. மாணவர்களும் படிக்கமாட்டார்கள். இதுகுறித்து அறிந்துகொண்டே, இதில் சேர 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் எஃப் 1 விசாவை நீட்டித்து அமெரிக்காவிலேயே தங்க அவர்கள் முயற்சித்துள்ளனர். வெளிநாட்டை சேர்ந்த பலர், ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தங்களுக்கான மாணவர் விசாவை நீட்டித்து அமெரிக்காவில் தங்கியிருந்தனர்.

இதுபோன்று சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் விதமாக மாணவர்களை சேர்ப்பதற்கான தேர்வாளர்களும் செயல்பட்டுள்ளனர். இதுபோன்ற தேர்வாளர்கள் 8 பேரை கடந்த வார தொடக்கத்தில் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள். இதனையடுத்து அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், போலியாக விசா நீட்டிப்பு பெற்ற 129 இந்தியர்கள் உள்பட 130 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் தடுப்புக் காவல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் போன்றே மேலும் 650 மாணவர்கள் சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது.

2016 ஆப்ரேஷன்

இதுபோன்று போலி பல்கலைக்கழங்களை அரசு நிர்வாகமே அமைத்து மாணவர்களை பிடிப்பது என்பது முதல்முறை கிடையாது. கடந்த 2016-ம் ஆண்டும் அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவம் நேரிட்டது. அப்போது அமெரிக்க அதிகாரிகள் வடக்கு நியூஜெர்சி என்ற பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கினார்கள். அப்போது விசா நீட்டிப்புக்காக அதில் சேர்ந்த 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் வரையில்…

இரு நடவடிக்கையிலும் மாணவர்கள் சந்தேகம் அடையாத வகையில் அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் இணையதளம் அதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக்க நூலகத்தில் மாணவர்கள் படிப்பது போன்றும், ஓய்வு அறையில் இருப்பது போன்றும் துளி அளவு சந்தேகம் வராத வகையில் அமெரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதுபோன்று பேஸ்புக் பக்கத்திலும் போலி கணக்கு தொடங்கி விளம்பரம் செய்துள்ளனர். அங்கும் உண்மையான பல்கலைக்கழகம் போன்றே வெளிக்காட்டியுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் என தெரியவந்துள்ளது என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா வலியுறுத்தல்

விசா மோசடி குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 129 இந்திய மாணவர்கள் குறித்த தங்கள் கவலைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அவர்களை விடுவிக்குமாறு கோரியுள்ளது.

இந்திய வெளியுறவு விவகார அமைச்சகம் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், “கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களின் நலம் மற்றும் கவுரவம் குறித்து கவலையடைகிறோம். இந்திய தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டோரை சந்திக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம், மேலும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் விருப்பத்துக்கு எதிராக அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறோம்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.

போலி விசா பெற்றதாக கைது செய்யப்பட்டவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.