மோகன்லாலுக்கு பா.ஜனதா வலைவீச்சு…! ரசிகர்கள் செக்…!

Read Time:3 Minute, 8 Second

2019 தேர்தலில் போட்டியிட்டால் மோகன்லாலுக்கு எதிராக கடுமையான போராட்டம் வெடிக்கும் என அவரது ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர்கள் அக்‌ஷய்குமார், மோகன்லால் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் உள்பட 70 பிரபலங்களை களமிறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசுக்கு எதிராக போராடிவரும் பா.ஜனதா தேர்தலுக்கு பல்வேறு வியூகங்களை வகுக்கிறது. இதில் ஒரு பகுதியாக மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை களமிறக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா தலைவரும், கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வுமான ராஜகோபால், என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், 2019 தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட பா.ஜனதா மோகன்லாலிடம் பேசியுள்ளது என்று குறிப்பிட்டார். மோகன்லால் திருவனந்தபுரத்திலிருந்து வந்தவர். பொது விவகாரங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரை போட்டியிடச்செய்ய வலியுறுத்துவோம். ஆனால் போட்டியிடுவது தொடர்பாக அவர்தான் முடிவு செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். இதற்கு அவருடைய ரசிகர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மோகன்லால் அரசியலுக்கு வருவது தொடர்பாக ஆசியாநெட் தொலைக்காட்சி நடைபெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்ட அவருடைய ரசிகர் மன்றத் தலைவர் விமல் குமார், “மோகன்லால் போன்றவர்களை அரசியலுக்கு கொண்டுவருவதில் பா.ஜனதாவிற்கு ஏதாவது பின்னணி திட்டம் இருக்கலாம். அவரை அரசியலுக்கு இழுக்க விரும்பும் பா.ஜனதா தலைவர்கள், முதலில் தாங்கள் போட்டியிட உள்ளோமா என்பத உறுதி செய்ய வேண்டும். மோகன்லால் தேர்தலில் போட்டியிட்டால் அவருடைய ரசிகர்களாகிய நாங்கள் கண்டிப்பாக போராட்டம் நடத்துவோம்,” என கூறியுள்ளார்.

மோகன்லால் அரசியலுக்கு வருவது தொடர்பாக அவர் எதுவும் கூறாத நிலையில், அவருடைய ரசிகர்கள் பா.ஜனதாவின் முயற்சிக்கு செக் வைப்பதாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மோகன்லாலுக்கு தெரியாமல் விமல் இவ்வாறு பேசமாட்டார் எனவும் கூறப்படுகிறது.மோகன்லால் செப்டம்பரில் பிரதமர் மோடியை திடீரென சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதும் எதிர்ப்பு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.