“சொந்த குடும்பத்தைக் கவனிக்க முடியாதவர்களால், நாட்டை நிர்வகிக்க முடியாது” மோடியை சீண்டுகிறாரா கட்கரி?

Read Time:5 Minute, 26 Second

“சொந்த குடும்பத்தைக் கவனிக்க முடியாதவர்களால், நாட்டை நிர்வகிக்க முடியாது” என்று கட்கரி பேசியது, மோடியை சீண்டுவது போன்றுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்கள் சமீப காலமாக முக்கியத்துவம் பெற்று வருகிறது. 2018 அக்டோபரில் “தேர்தலில் வெற்றிபெற பொய்யான வாக்குறுதிகளை சொன்னோம்” என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையாகியது. இதற்கிடையே பிரதமர் மோடிக்கு எதிராக கூட்டணி கட்சியான சிவசேனா குரல் எழுப்பியது. 2019 தேர்தலில் கட்காரியை பிரதமர் வேட்பாளராக களமிறக்கினால்தான் கூட்டணியென்றது.

இதற்கிடையே மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் “அரசியல்வாதிகள் 100 சதவீதம் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே மக்களிடம் அளிக்க வேண்டும். மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதிகளை மக்கள் விரும்பமாட்டார்கள், மாறாக தண்டித்துவிடுவார்கள்,” என்றார். மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் பா.ஜனதா தோல்வியை தழுவியதை குறிப்பிட்டு அப்படி பேசினார். நான் கடந்த 1994-99 பா.ஜனதா-சிவசேனா கூட்டணியில் மராட்டியத்தில் அரசில் அமைச்சராக இருந்தபோது கூட எந்த வாக்குறுதியும் மிகைப்படுத்தி அளிக்கவில்லை. நான் அளித்தவாக்குறியை நிறைவேற்றியுள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.

நிதின் கட்கரியின் இந்த எச்சரிக்கை பிரதமர் மோடிக்குத்தானே என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்தது.

குடும்ப விவகாரம்

பிரதமர் மோடி, தன் மனைவியை இளம் வயதிலேயே பிரிந்தது குறித்து அவரது அரசியல் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இப்போது சொந்தக் கட்சிக்குள் இருந்தே மோடியைச் சீண்டும் விதமான கருத்து வெளிப்பட்டிருப்பது, அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “சொந்த குடும்பத்தைக் கவனிக்க முடியாதவர்களால், நாட்டை நிர்வகிக்க முடியாது” என்று கட்கரி பேசியது மறைமுகமான தாக்காக அமைந்துள்ளது என பார்க்கப்படுகிறது.

நாக்பூரில் பா.ஜனதா மாணவர் அமைப்பின் கூட்டத்தில் நிதின் கட்கரி கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “என்னைச் சந்திக்கும் பல பா.ஜ.க தொண்டர்கள், தங்கள் வாழ்க்கையை கட்சிக்கும், நாட்டுக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் பா.ஜனதா தொண்டரை சந்தித்து பேசினேன். அவரிடம், `நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான் சிறிய கடை ஒன்று நடத்தினேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், அந்தக் கடையை மூடிவிட்டேன்’ என்றார். அவருடைய குடும்பத்தைப் பற்றி கேட்டபோது, மனைவியும், ஒரு குழந்தையும் இருப்பதாக கூறினார்.

நான் அவரிடம் கூறினேன், `முதலில் உன் குடும்பத்தை நன்றாகக் கவனித்துக்கொள். ஏனென்றால், குடும்பத்தை நன்றாகக் கவனிக்க முடியாதவர்களால், நாட்டை நிர்வகிக்க முடியாது. ஆதலால், முதலில் உன்னுடைய குடும்பத்தை நன்றாகக் கவனி, குழந்தைகள் நலனில் அக்கறையாக இரு, அதன்பின் கட்சியையும் நாட்டையும் கவனிக்கலாம்’ என்று தெரிவித்தேன் ” என்று கூறினார். கட்கரியின் இந்தக் கருத்து, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், பிரதமர் மோடியை விமர்சிப்பதாக கருதப்படுகிறது.

இதற்கிடையே நிதின் கட்கரியின் பேச்சை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பா.ஜனதாவில் சிறிதளவு தைரியம் கொண்ட ஒரே நபர் நிதின் கட்கரிதான். ரபேல் விவகாரம், விவசாயிகளின் துயரம் மற்றும் சி.பி.ஐ, ஆர்.பி.ஐ போன்ற நிறுவனங்களின் அழிவுகுறித்தும் அவர் பேச வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளார். ராகுலின் இந்த கருத்து பா.ஜனதாவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தைரியம் விவகாரத்தில் உங்களுடைய சான்றிதழ் எனக்கு தேவையில்லை என ராகுலுக்கு கட்கரி பதில் அளித்துள்ளார். பா.ஜனதாவில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா, சத்ரூகன் சின்ஹா பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.