சாரதா சிட்பண்ட் பல்லாயிரம் கோடியை சுருட்டியது எப்படி?

Read Time:4 Minute, 54 Second

மேற்கு வங்காளத்தில் கால்பந்து முதல் துர்கா பூஜை வரை எதையெல்லாம் மக்களை அடைய பயன்படுத்த வேண்டுமோ அதனை சாரதா சிட்பண்ட் நிறுவனம் சரியாக பயன்படுத்தியது.

‘‘உங்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதே, எங்களின் லட்சியம். இரவில் நீங்கள் காணும் கனவுகளை எல்லாம் நிஜமாக்குகிறோம்”. இது தான் சாரதா நிறுவனத்தின் முழக்கம். இந்த முழக்கத்தை நம்பி ஏமாந்தவர்கள் ஒடிசா, அசாம் ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 17 லட்சம் மக்கள். அவர்கள் இழந்த தொகை ரூ.30 ஆயிரம் கோடி. கடந்த 2006-ம் ஆண்டு தான் தன்னை ஒரு நிறுவனமாக பதிவு செய்த நிறுவனம், ‘‘உங்களது முதலீட்டுக்கு அதிக வட்டி தருகிறோம்” என்று ஆசையை தூண்டி முதலீட்டை பெற தொடங்கியது.

மக்களும் அதிக வட்டி கிடைக்கும் என்பதால் முதலீடு செய்யத் தொடங்கினர். கிராம, கிராமாக சென்று முதலீட்டை பெறுவதற்கு பல ஆயிரம் இளைஞர்களை இந்த நிறுவனம் களத்தில் இறக்கியது. மேற்கு வங்கத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளின் ஆதரவு இந்த நிறுவனத்துக்கு இருந்தது. செலிபிரிட்டிகளை அழைத்து விழா எடுத்து மக்கள் மத்தியில் பிராண்ட் வேல்யூவை கூட்டிக் காட்டியது. துர்கா பூஜையும் மேற்கு வங்கத்தில் வெகு பிரபலம். துர்கா பூஜை நடத்த ஸ்பான்ஷர் செய்வதும் இந்த நிறுவனத்தின் வழக்கம். இந்த நிறுவனம் மூலம் திரட்டிய தொகையின் மூலம் சுமார் 200 கம்பெனிகளை தொடங்கியது.

இந்த நிறுவனங்கள் சுற்றுலா, வாகனங்கள் தயாரிப்பு, ஓட்டல்கள், பத்திரிகை, திரைப்படத்துறை என அனைத்திலும் கால் பதித்தது. நிறுவனத்தி அசுரவேக வளர்ச்சியை கண்காணித்த செபி, அமலாக்கப்பிரிவுக்கு 2009-ல் கடிதம் எழுதியது. அதன்பின் தான் சாரதா நிறுவனம் குறித்து பல்வேறு தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கின.

2012–ம் ஆண்டு சாரதா நிறுவனம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டது.

இதற்கு பின்னர்தான் விஷயம் சூடுபிடித்தது. 2011 தேர்தலில் அமோக வெற்றியுடன் ஆட்சிக்குவந்தார் மம்தா பானர்ஜி. ஆனால் சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் மோசடியில் சம்பந்தப்பட்டவர்களில் பலரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதற்கிடையில் முதலீடாக பெற்ற பணத்தை காலக்கெடு முடிந்ததால் ஏராளமானோர் திருப்பி தருமாறு கேட்டனர். அப்போது தான் இந்த நிறுவனம் கம்பியை நீட்டியது. அதிகாரிகளை செமத்தியாக கவனித்த நிறுவனம் பொதுமக்களுக்கு பட்டை நாமத்தை தீட்டியது. எங்களிடம் பணமே கிடையாது என்றது. இதனையடுத்து பொதுமக்கள், பணியாளர்கள், அதிகாரிகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் நடைபெற்றது.

2013-ல் ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது, திரிணாமுல் கட்சி எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் சாரதா நிறுவனத்தின் ஊழியர்கள் போலவே செயல்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சாரதா நிறுவனத்தால் பணத்தை இழந்த ஏழைகளுக்கு வழங்க மம்தா, அரசு நிதியில் இருந்து ரூ.500 கோடி ஒதுக்கினார்.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் “என்னுடைய ஆட்சியில் தவறு ஏதேனும் நடந்தால் அதற்கு நான்தான் பொறுப்பு. அதற்காக என்னுடைய கட்சிக்கு ஆதரவு அளிப்பதையும் எனக்கு ஆசி வழங்குவதையும் நிறுத்திவிடாதீர்கள்” என்று வேண்டிய மம்தா பானர்ஜி, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்கனவே பெற்ற வெற்றியைவிடவும் அதிகமான வெற்றியை பதிவு செய்து செல்வாக்கை காட்டினார். இந்தியாவின் ஏழைகளின் முதல்வராக பார்க்கப்படும் மம்தா, அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டதில் தன்னுடைய பொறுப்பில் இருந்து விலக முடியும்?.