சிபிஐ – கொல்கத்தா போலீஸ் மோதலில் நடப்பது என்ன?

Read Time:5 Minute, 44 Second

சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால், அங்கு கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகள் முறையான அனுமதியில்லாமல் வந்துள்ளார்கள் எனக் கூறி அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். பிரதமர் மோடி, அமித் ஷாவும் சட்டவிரோதமாக மாநிலத்தைக் கைப்பற்ற முயல்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்து வருகிறார். சிபிஐ – கொல்கத்தா போலீஸ் மோதலில் நடப்பது என்ன? என்பதை விளக்கமாக காணலாம்.

சிபிஐ மற்றும் கொல்கத்தா போலீஸ் மோதலில் மையமாக இருக்கும் ராஜீவ் குமார் யார்?

இப்போது கொல்கத்தா மாநில போலீஸ் கமிஷ்னராக இருக்கும் ராஜீவ் குமார், சாரதா மோசடி மற்றும் ரோஸ் வேலி மோசடியில் 2013-ம் ஆண்டு சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவராக இருந்தார். சாரதா மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சம்மன் விடுத்தும் அதனை ராஜீவ் குமார் நிராகரித்துவிட்டார் என சிபிஐ கூறியுள்ளது.

சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஷ்வர ராவ் பேசுகையில், “நாங்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில்தான் விசாரணையை மேற்கொள்கிறோம். அதற்கு முன்னதாக மேற்கு வங்காள போலீசின் சிறப்பு விசாரணைக்குழு விசாரித்தது,” என்றார். இருப்பினும் ராஜீவ் குமாரிடம் விசாரிக்க சிபிஐ சென்றதா? அல்லது ஆவணங்களை சேகரிக்க சென்றதா? என்று விளக்கப்படவில்லை.

கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய விஷயங்கள்:-

* சாரதா ஊழல் விசாரணையை மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநில போலீசாரிடமிருந்து சிபிஐக்கு உச்சநீதிமன்றம் 2014 மே 9-ம் தேதி மாற்றியது. விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டப் போது மேற்கு வங்காளத்திற்குள் விசாரிக்க மாநில அரசிடம் தனி அனுமதி கோர வேண்டிய அவசியம் கிடையாது.

* சாரதா ஊழல் தொடர்பாக பிப்ரவரி 3-ம் தேதி வரையில் விசாரணையில் எந்தஒரு நகர்வும் கிடையாது. கொல்கத்தா போலீஸ் மற்றும் ராஜீகுமார் ஆவணங்களை அழித்துவிட முயற்சி செய்கிறார்கள் என்று சிபிஐ குற்றம் சாட்டும் வரையில் எந்தஒரு நகர்வும் கிடையாது.

போலீஸ் கமிஷ்னராக இருப்பவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் சிபிஐ என்ன செய்ய வேண்டும்?

1) மாநில முதல்வரின் செயலாளரின் உதவியை சிபிஐ நாடவேண்டும்.

2) விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் ராஜீவ்குமாரை மத்திய அரசு சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

3) ராஜீவ்குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.

உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

கொல்கத்தா போலீஸ் தடுத்த நிலையில் சிபிஐ தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிப்ரவரி 5 உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ராஜீவ்குமார் ஒத்துழைக்கவில்லை என்றபோது நீதிமன்றம் செல்லவில்லை. மேற்கு வங்க அரசு தடை ஏற்படுத்தியதும் சென்றுள்ளது. மனு விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கொல்கத்தா போலீஸ் விசாரணை தொடர்பான ஆவணங்களை அழிக்க முயற்சி செய்கிறது என்பதற்கான ஆதாரங்களை 24 மணி நேரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

அனுமதி வாபஸ்

சமீபத்தில் சிபிஐ அமைப்பு தனது அதிகாரத்தை செயல்படுத்துவதற்காக வழங்கியிருந்த பொது ஒப்புதலை மேற்கு வங்காள அரசு திரும்பப்பெற்றது. இதன்மூலம் மாநிலத்தில் எந்தவொரு வழக்கு விசாரணையை மேற்கொள்வதாக இருந்தாலும், மாநில அரசின் முன் அனுமதியை சிபிஐ பெற வேண்டும்.

* வாரண்ட் இல்லாமல் சிபிஐ அங்கு செல்ல முடியாது

* வாரண்ட் இல்லாமல் வரும் அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுக்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் மம்தா பானர்ஜி கடும் மோதலில் ஈடுபட்டு உள்ளார். மம்தா பானர்ஜி பிப்ரவரி 8-ம் தேதி வரையில் தர்ணாவை தொடர்கிறார்.