யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பொருத்தப்படும் – தேர்தல் ஆணையம்

Read Time:2 Minute, 48 Second

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய, வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இருப்பினும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த வசதிகளை ஏற்படுத்தப்படவில்லை. ‘‘இனி வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிய ஒப்புகை சீட்டு இயந்திரம் (விவிபாட்) பயன்படுத்தப்படும்’’ என்று தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

உயர்நீதிமன்றத்தில் தகவல்

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த இயந்திரங்களை பொருத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் “ஒப்புகை சீட்டு எந்திரத்தை பொருத்தும் நடைமுறையை படிப்படியாக மேற்கொள்ளவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2017-ம் ஆண்டு அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அதில், விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

விவிபாட் இயந்திரம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன், விவிபாட் எனப்படும் இயந்திரம் இணைக்கப்படும். வாக்காளர் வாக்களித்தவுடன், அவர் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார் என்பது கட்சி சின்னத்துடன் அச்சிட்ட தாள் வெளிவரும். அதை வாக்காளர் சரி பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் வாக்குப் பதிவில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும். ஆனால், ஒப்புகை சீட்டை வாக்காளர் வெளியில் கொண்டு செல்ல முடியாது. விவிபாட் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் தாள், அருகில் உள்ள பெட்டியில் தானாக விழும் என்பது குறிப்பிடத்தக்கது.