சிபிஐ – கொல்கத்தா போலீஸ் மோதல்; உச்சநீதிமன்ற உத்தரவு யாருக்கான வெற்றி?

Read Time:3 Minute, 59 Second

சிபிஐ – கொல்கத்தா போலீஸ் மோதலில் உச்சநீதிமன்ற உத்தரவை எங்களுக்கான வெற்றியென கூற பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரசுக்கு சம அளவில் உரிமையுள்ளது.

சாரதா நிதிநிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ அமைப்பு நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா நகர காவல்துறை கமிஷ்னர் ராஜீவ் குமாரை விசாரிக்க அவரது வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமைச் சென்ற சிபிஐ அதிகாரிகள், அந்த மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், சாரதா நிதிநிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐயிடம் ராஜீவ் குமாரை சரணடைய உத்தரவிட வேண்டும், எந்த ஆதாரத்தையும் சேதப்படுத்தவோ அல்லது அழிக்கவோ கூடாது என ராஜீவ் குமாருக்கு உத்தரவிட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ விசாரணை நடத்தி வருவதால், இந்த விவகாரத்தில் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம்,

மேகாலயாவில் ஷில்லாங் நகரில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும். சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நம்பத்தகுந்த விதத்தில் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ராஜீவ் குமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்யக் கூடாது. அவர் மீது கடுமையான பிற நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

சாட்சியங்களை குலைக்க முயற்சித்தார் என்ற சி.பி.ஐ. தரப்பு புகார் பற்றி ராஜீவ் குமார் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அவமதிப்பு வழக்கு பற்றி 18-ந்தேதியோ, அதற்கு முன்பாகவோ பதில் மனு தாக்கல் செய்வதற்கு மேற்கு வங்காள மாநில அரசு தலைமைச்செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் 3 பேரும் 20-ந்தேதி கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராக வேண்டுமா என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டின் தலைமைச்செயலாளர் 19-ந்தேதி தெரிவிப்பார் என உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ – கொல்கத்தா போலீஸ் இடையிலான மோதல் பிரதமர் மோடி மற்றும் மம்தா பானர்ஜிக்கு இடையிலான மோதலாக பார்க்கப்பட்டது. உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு தங்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதுபோன்றும் பா.ஜனதாவும் கூறுகிறது. கொல்கத்தா நகர காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும், ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை சிபிஐ எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பது பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இருதரப்பிற்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.