நாகர்கோவிலில் 163 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கம்…

Read Time:2 Minute, 56 Second

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு 163 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளை கவர திட்டமிட்டு, ஆங்கிலேயர் கால நூற்றாண்டு கண்ட பழமையான நீராவி என்ஜின் மூலம் குறிப்பிட்ட தடங்களில் ரெயில் இயக்கும் திட்டத்தை ரெயில்வே துறை அறிமுகப்படுத்தியது. ஹெரிடேஜ் ரெயில் என்றழைக்கப்படும் இந்த பாரம்பரிய ரெயில் பயணம், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டது.

இங்கிலாந்தில் 1855ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட இந்த நீராவி ரெயில் என்ஜின்கள் இப்பயணத்தில் இயக்கப்படுகின்றன. இத்திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை அமல்படுத்தப்பட்டது. இதற்காக 163 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி என்ஜின் கடந்த சில தினங்களுக்கு முன் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த ரெயிலில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒரு பயணிகள் பெட்டி, ஒரு கார்டு பெட்டி மட்டுமே என்ஜினுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலில் 40 பேர் பயணம் செய்யலாம். பயணிகளுக்கு தனித்தனி சொகுசு இருக்கைகள் இருந்தன. இந்த பயணத்திற்கு சொற்ப எண்ணிக்கையில்தான் பயணிகள் வந்தனர். அதுவும் வெளிநாட்டினர்தான். மொத்தத்தில் 20 பேர் மட்டுமே இதில் பயணித்தனர். இந்த ரெயில் முழுக்க முழுக்க நிலக்கரியால் இயக்கப்படுகிறது.

மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரெயில் செல்லும். அந்த வகையில் நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே உள்ள 20 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரெயில் சென்றடைய 30 நிமிடங்கள் ஆகும்.

இந்த பழமை வாய்ந்த ரெயிலில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதுவே வெளிநாட்டு பயணிகள் என்றால் கட்டணம் ரூ.1,500 ஆகும். கட்டண உயர்வே உள்ளூர் பயணிகள் புறக்கணிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலானோர் ரெயிலை பார்வையிட்டதுடன் திரும்பிச் சென்றனர். பயணி ஒருவர் பேசுகையில், “என்னுடைய மகளுடன் பயணம் செய்வதற்காக வந்தேன். ஆனால் கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதால் பயணம் செய்ய விரும்பவில்லை,” என்று கூறியுள்ளார்.