பின்னணியில் `காதலே காதலே’ பாடலின் பிஜிஎம் “இதுதான் 96 படத்துடைய க்ளைமாக்ஸ்”

Read Time:4 Minute, 32 Second

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 படத்தின் 100-வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் பேசிசுகையில்,

“காதலிக்கிறதுக்கு காதலியோ காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதும்.

பொதுவா ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஆசைப்படுறது ஒரு இடமாக இருக்கும். வாழ்க்கைப்படுறது வேற ஒரு இடமா இருக்கும். அந்த வாழ்க்கையை வாழுவோம். இளையராஜா சார் விழாவுல போட்டுக்கிறதுக்காக ஒரு மாசம் முன்னாடியே இந்த சட்டையை மியூசிக்கல் சிம்பள் எல்லாம் வெச்சு தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால், ஒரு சில காரணங்களால நான் அங்கே போகலை. அந்தச் சட்டையோடு இங்கே வந்திருக்கேன்.

ஜுராசிக் பார்க் படம் நாம் பார்த்திருப்போம். தற்போது டைனோசர் இல்லை. ஆனால் டைனோசர் இருப்பது போன்று காட்டி நம்மை பயமுறுத்தியிருப்பார்கள். அந்த டைனோசர் போன்று தான் 96 படத்தில் வந்த காதல். 96 ஒரு எதார்த்தமான படம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு தெரிந்து இது எதார்த்தமான படம் கிடையாது. படம் ரிலீஸான பிறகு எல்லோரையும் போன்று தியேட்டரில் படம் பார்த்துவிட்டு ராத்திரி எல்லாம் தூங்காமல், புலம்பினேன். மறுநாள் இயக்குநரிடம் பேசினேன்.

அப்போது இது ரொம்ப அயோக்கியத்தனமான படம் என்று இயக்குனரிடம் கூறினேன். எந்த காலகட்டத்தில் என்ன படம் எடுத்திருக்கிறீர்கள் என்றேன். அழகி படத்தை பார்த்தால் அவர்கள் இருவரும் சேராமல் இருப்பதற்கு காரணம் உள்ளது. ஏனென்றால் நாயகனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறது, அப்போது இருவரும் சேர்ந்தால் அயோக்கியத்தனமாக இருக்கும். ஆனால் இந்த படத்தை பார்த்தால் ஜானுவும், ராமும் ஒரேயொரு முறை கட்டிப்பிடித்தால் நன்றாக இருந்திருக்கும், சந்தேஷமாக இருந்து இருக்கும். ஆனால் இயக்குநர், அதனை இழுத்து, இழுத்து இயக்குனர் நம்மை ஏங்க வைத்துவிட்டார்.

படத்தில் ‘யமுனை ஆற்றிலே’ பாடலோட ஒரிஜினல் வெர்ஷனைவிட இந்தப் படத்துல அந்தப் பாட்டு எப்போ வரும்னுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். காட்சிப் படுத்தலும் மிகவும் அழகாக இருந்தது. எல்லோரது மனதிலும் தெய்வீக காதல் இருக்கிறது. எனக்கும் ஒரு காதல் இருந்தது. இருக்கிறது. பேசி பல வருடங்களாகி விட்டது. ஆனாலும் இப்போது அவர், போனில் தொடர்பு கொண்டு உங்களை சந்திக்கலாமா? என்று சொல்லி விடக் கூடாதே என்ற தவிப்பு இருக்கிறது.

ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் திமிர் இருக்கும். திமிரோடுதான் படத்தை பார்ப்பார்கள். அப்படி திமிருடன் படம் பார்த்தவர்களையெல்லாம் தலையில் தட்டி படம் என்றால் இதுதான் என்று சொல்லவைத்தது ‘96’ படம். மக்களுக்கு பிடித்தவராக இருக்கிறார் விஜய் சேதுபதி. அந்த காலத்தில் எம்.கே.டி. தியாகராஜபாகவதர் என்ற சூப்பர் ஸ்டார் இருந்தார். அவருக்கு பெண்களிடம் வரவேற்பு இருந்தது. அதே வரவேற்பு இப்போது விஜய் சேதுபதிக்கும் இருக்கிறது என்றார்.

இறுதியில், படத்தில் ஒரு முறையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களானு ஆர்வமா இருந்தோம். அது இங்கே நடக்க இருக்கு” என்று விஜய் சேதுபதியையும் த்ரிஷாவையும் மேடைக்கு அழைத்து கட்டிப்பிடிக்கச் சொன்னார் பார்த்திபன். `காதலே காதலே’ பாடலின் பிஜிஎம் பின்னணி இசையாக வர இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டனர். “இதுதான் படத்துடைய க்ளைமாக்ஸ்” என்றார் விஜய் சேதுபதி.