வீடு, வாகன வட்டி குறைய வாய்ப்பு…!

Read Time:5 Minute, 0 Second

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்து உள்ளதால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் முதலாவது நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரெப்போ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் ஆகியவற்றை 0.25 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.5 சதவீதத்தில் இருந்து குறைந்து 6.25 சதவீதமாக இருக்கும். அதேபோல் வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற இரு நிதிக் கொள்கைக் குழு கூட்டத்திலும் வட்டி விகிதம் மாற்றப்ப்படவில்லை. இந்நிலையில், இப்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. தொழில்முனைவோர், சிறு தொழில்புரிவோர், வீடு, வாகனங்கள் வாங்குவோர் என பலதரப்பட்ட மக்களுக்கும் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைக்கும். அதே நேரத்தில் பொதுமக்களின் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியும் குறைய வாய்ப்பு உள்ளது.

ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், விவசாய இடுபொருள் செலவு அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விவசாயத்துக்கு வழங்கப்படும் அடமானம் இல்லாத கடனை, ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.6 லட்சமாக அதிகரிக்க ஆர்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

ஆர்பிஐ-யிடம் இருந்து இடைக்கால பங்கீட்டுத் தொகையாக ரூ.28,000 கோடி கிடைக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், இது தொடர்பான முடிவு அடுத்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று ஆர்பிஐ அறிவித்துவிட்டது.

ரிசர்வ் வங்கி வட்டி விகித குறைப்பு குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், வட்டி விகிதத்தை ஆர்பிஐ குறைத்துள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை. இதன் மூலம் சிறு தொழில் முனைவோர், வீடு வாங்குபவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு, வட்டி விகிதம் தொடர்ந்து 6 முறை குறைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி வெகுவாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

உங்களுடைய இஎம்ஐ எவ்வளவு குறையும்

10 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.25 லட்சம் வீட்டுக்கடன் பெற்று இருந்தால், இப்போதைய வட்டி விகிதம் 9.55 சதவிதமாகும். இஎம்ஐ ரூ. 33,715 ஆகும். ரிசர்வ் வங்கி 0.25 சதவிதம் குறைத்து உள்ளதால் வட்டி விகிதம் 9.3 சதவிதமாக குறையும். அப்போது நீங்கள் மாதம் செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகை ரூ. 1,639 குறைந்து ரூ. 32,076 ஆக இருக்கும். 20 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.50 லட்சம் வீட்டுக்கடன் பெற்றிந்தால், இப்போதைய இஎம்ஐ ரூ. 47,705-ல் இருந்து 45,955 ஆக குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் பெரிய கடன் தொகை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும். எடுத்துக்காட்டாக 25 ஆண்டு காலகட்டத்தில் 75 லட்ச ரூபாய் வீட்டுக் கடன் பெற்று இருந்தால் இஎம்ஐ சுமை ரூ 2,177 குறையும். கட்டவேண்டிய இஎம்ஐ 66,665 ரூபாயிலிருந்து 64,488 ரூபாயாக குறையும்.