விஸ்வரூபம் எடுக்கும் ரபேல் விவகாரம் “அனில் அம்பானியின் பிரதிநிதிதான் பிரதமர்” ராகுல் காந்தி கடும் விமர்சனம்

Read Time:6 Minute, 0 Second

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியாவின் விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான பேரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார். பா.ஜனதா இதனை மறுக்கிறது. பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் ஒப்பந்தத்தை மாற்றினார் என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்நிலையில் ரபேல் போர் விமான பேச்சுவார்த்தைகளை பிரதமர் அலுவலகம் வலிவற்றதாக்கியதாகவும், பாதுகாப்பு அமைச்சகம் உறுதியான எதிர்ப்பை தெரிவித்ததாகவும் தி இந்து பத்திரிக்கையில் செய்தி வெளியாகியது.

இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளார்.

பிரதமர் மோடி அம்பானியின் பிரதிநிதி

இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி பேசுகையில், தி இந்து ஆங்கிலம் தெள்ளத் தெளிவாக்கி விட்டது. பிரதமர் அலுவலகமும் இணைபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. நாட்டின் இளைஞர்களிடத்தில் நான் முறையீடு செய்கிறேன். உங்கள் பணம் ரூ.30,000 கோடியை பிரதமர் களவாடியிருக்கிறார். நடைமுறைகளைப் பின்பற்றாமல் தன் நண்பருக்குப் பணம் கொடுத்துள்ளார். இதற்காக கூட்டுநாடாளுமன்ற கமிட்டியை நாங்கள் அழைத்துக் கொண்டிருக்கிறோம்.

அனில் அம்பானி பெயரை பிரதமர் கூறியதாக பிரான்ஸ் அதிபர் ஹோலந்தே தெரிவித்துவிட்டார். விமானப்படையில் உள்ள என் நண்பர்களே, இந்தப் பணம் உங்கள் பாதுகாப்புக்குப் பயன்படுத்தியிருக்கப் பட வேண்டியது. அல்லது உங்கள் குடும்பங்களுக்காக பயன்படுத்தியிருக்கலாம். பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒரு விஷயத்தைத் தன் கைப்பட எழுதுகிறார் என்றால் அதற்கான காரணத்துடன் தான் செய்திருப்பார். பிரதமர் அலுவலகம் தங்களை பின்னுக்குத் தள்ளி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்கிறார். அனில் அம்பானியின் பிரதிநிதிதான் பிரதமர்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கேள்விக்குரியதே. உச்ச நீதிமன்றத்திடம் இந்த ஆவணங்கள் இல்லை. அவர்கள் கோர்ட்டில் பொய் பேசியுள்ளனர். தங்களிடம் ஆவணம் இருந்திருந்தால் உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை அளித்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ராபர்ட் வத்ரா, சிதம்பரத்துக்கு எதிராக சட்டத்தைப் பயன்படுத்துங்கள், பிரச்சினையில்லை. ஆனால் ரபேல் குறித்தும் பதிலளியுங்கள். கடுமையான வார்த்தைகள் எனக்குப் பிடிக்காது, ஆனாலும் உண்மையைக் கூறித்தானே ஆகவேண்டும். இப்போது நாட்டுக்கு பிரதமர் ஒரு கயவர் என்பதை கூறியாக வேண்டிய நேரம் என்று கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் காட்டம்

தி இந்து பத்திரிக்கையில் வெளியான செய்தியை குறிப்பிட்டு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் போராட்டம் நடத்தின. அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “இவர்கள் செத்தக் குதிரையைப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளைப் பற்றிய அவ்வப்போதைய விசாரிப்புகளை பிரதம அலுவலகத்தின் தலையீடு என்று விளக்கமளிக்கப்படலாகாது” என்றார்.

மேலும் எதிர்க்கட்சியினர் பன்னாட்டு நிறுவனங்களின் சுயநலன்களின் கையில் விழுகின்றனர், இந்திய விமானப்படையின் நலன்களில் அக்கறையில்லை என்று சாடினார் நிர்மலா சீதாராமன். பிரான்ஸ் நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அப்போதைய பாதுகாப்புச் செயலர் ஆட்சேபணை தெரிவித்தார் என்ற தி இந்து செய்தி அறிக்கையைக் குறிப்பிட்டு பேசிய நிர்மலா சீதாராமன், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கடிதத்துக்கு பதில் அளிக்கையில் அந்த அதிகாரியை நோக்கி அனைத்தும் நன்றாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் அமைதி காக்கவும் என்று கூறினார் என்றார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தேசிய ஆலோசனைக் குழுவின் சேர்பர்சனாக இருந்த சோனியா காந்தி பிரதமர் அலுவலகதை நடத்தவில்லையா? அது தலையீடு ஆகாதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், ராகுல் காந்தியும், காங்கிரசும் ரபேல் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற ஒன்றையே வைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் வெளிநாட்டு சக்திகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காகவே இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளனர். அவர்களது இந்த நிலையால் இந்திய விமானப்படை வலுவிழக்கும் என்பதை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்றார்.