சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கப்பிரிவு விசாரிப்பது ஏன்?

Read Time:3 Minute, 21 Second

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கப்பிரிவு விசாரிப்பது ஏன்?

லண்டனில் அவர் சுமார் ரூ.17 கோடி மதிப்புள்ள சொத்து வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள், நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பான இ-மெயில் தகவல்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன் அடிப்படையில் ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக தன்னை பழிவாங்க போடப்பட்டவை என ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக விரிவாக பார்ப்போம். லண்டனில் உள்ள சொத்துக்கு ராபர்ட் வதேராதான் உரிமையாளர் என்பதற்கு எலக்டிரானிக் ஆதாரங்கள் மட்டுமே உள்ளது என அமலாக்கப்பிரிவு தெரிவிக்கிறது. சொத்தை சஞ்சய் பண்டாரியை பார்த்துக்கொள்ள கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரதிபலனாக ஆயுத தரகர் வாயிலாக லண்டனில் வதேரா சொத்து வாங்கியுள்ளார் என அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டுகிறது.


1) சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து பயிற்சி விமானங்கள் வாங்க காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ரூ. 2,896 கோடியில் 2012-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தம் செய்தது யார்? என்றால் சஞ்சய் பண்டாரி.


2) இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் மூலம் சஞ்சய் பண்டாரியின் வெளிநாட்டு நிறுவனத்திற்கு ரூ. 5.36 கோடி அளவில் நிதி கிடைத்துள்ளது.


3) பண்டாரி நிறுவனத்திற்கு கிடைத்த தொகை ஷெல் நிறுவனம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னர் இந்த பணம் லண்டனில் சொத்து வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டுகிறது அமலாக்கப்பிரிவு.


இப்போது சஞ்சய் பண்டாரி என்ன ஆனார்? தலைமறைவாக உள்ளார். ஆனால் இ-மெயில் அனுப்பியது தொடர்பாக ராபர்ட் வதேரா மறுப்பு தெரிவிக்கிறார். அவரிடம் அமலாக்கப்பிரிவு இரண்டு நாட்கள் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டது.

வதேரா மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. இருந்தாலும் அவர் அதிகாரிகளின் விசாரணைக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு கொடுத்தார். எப்போது அழைத்தாலும் அவர் விசாரணைக்கு வர தயாராக உள்ளார் என்று அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார். இதற்கிடையே 2009-ம் ஆண்டு பெட்ரோலிய ஒப்பந்தம் மூலமாகவும் ராபர்ட் வதேரா பயனடைந்துள்ளார் என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.