காங்கிரசுக்கு கை சின்னத்தை இந்திரா காந்தி தேர்வு செய்ததற்கு பின்னால் இருக்கும் ஸ்டோரி…!

Read Time:4 Minute, 5 Second

(1975-77) அவசரநிலை முடிவுக்கு வந்த பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அத்துடன் பசுவும் கன்றுக்குட்டியும் அடங்கிய சின்னமும் பறிபோனது. காங்கிரஸின் முந்தைய சின்னமான இரட்டைக் காளை சின்னத்தை கோரினார். அது முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் சைக்கிள் அல்லது யானை சின்னத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியது என்றும் இந்திரா காந்தி கை சின்னத்தை தேர்வு செய்தார் எனவும் கூறப்படுகிறது. பின்னர் சைக்கிள் சின்னம் சமாஜ்வாடி கட்சிக்கும், யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் சென்றது.

இந்நிலையில் இந்திரா காந்தி கை சின்னத்தை தேர்வு செய்வதற்கு காரணம் கேரள மாநில கோவில்தான் என கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு வந்து சென்ற பின்னர்தான் பகவதியின் அம்சமாக கை சின்னத்தை அவர் தேர்வு செய்தார் என கூறப்படுகிறது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே இமூர் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இதில் 2 கைகள்தான் சிலையாக உள்ளது. இவை பார்வதியின் கைகள் என நம்பப்படுகிறது. இதில் ஒரு கை பார்வதியின் அச்சமின்மையையும் மற்றொரு கை எந்தப் பிரச்சினையிலிருந்தும் மீள முடியும் என்ற திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் கோவிலை பற்றி கேள்விப்பட்ட இந்திரா காந்தி, அங்கிருந்த சிலையின் 2 கைகளில் ஒரு கையை தனது கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுத்தார். அந்த சின்னம்தான் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது என கூறப்படுகிறது.

இதையடுத்து நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். இதையடுத்து, இமூர் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்ற இந்திரா, பெரிய மணி ஒன்றை காணிக்கையாக வழங்கினார். இந்தத் தகவலை கோவில் மேலாளர் பி.மோகனசுந்தரம் கூறுகிறார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கே சின்னம் தேர்வுக்கு காரணம் தெரியாத நிலையில், கேரள மாநில கோவிலுக்கு வந்த பின்னர்தான் தேர்வு செய்தார் என கூறப்படுகிறது.

கேரளாவில் தேர்தல் நெருங்கும் நிலையில் ‘கை’ கோயிலுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இப்போது 2019 தேர்தல் நெருங்க உள்ள நிலையில் கோவிலுக்கு அரசியல்வாதிகள் படையெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவுக்கு பிரச்சாரத்துக்கு வரும்போது, இந்தக் கோவிலில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று உள்ளூர் காங்கிரஸார் விருப்பம் தெரிவிக்கின்றனர். இக்கோவிலுக்கு தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வேண்டியும், வெற்றி பெற வேண்டியும் இந்தக் கோயிலுக்கு செல்லும் அரசியல் கட்சித் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கேரளா மட்டுமல்லாது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில அரசியல்வாதிகளும் பகவதி அம்மனின் ஆசி வேண்டி அங்கு சென்று வருகின்றனர். இந்தக் கோவிலை மலபார் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.