நிலநடுக்கத்தால் சென்னைக்கு பாதிப்பா? தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

Read Time:2 Minute, 8 Second

வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் விளக்கியுள்ளார்.

சென்னை வடகிழக்கு வங்கக்கடலில் இன்று காலை 7.02 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.சென்னையில் சில இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சென்னைக்கு வடகிழக்கே 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 10 கிலோ மூட்டர் ஆழத்தில் உருவான நில நடுக்கம் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. நில நடுக்கம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள், சென்னையில் வசிக்கும் தங்கள் உறவினர்கள், நண்பர்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதற்கிடையே சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் விளக்கியுள்ளார்.

சென்னையை மையமாக கொண்டு 4.9 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்படவில்லை. சென்னையில் இருந்து தொலைவில்தான் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே எந்தஒரு பாதிப்பும் இருக்காது, பயப்பட தேவையில்லை. எந்தஒரு வதந்திகளையும் நம்பவேண்டாம், வதந்தி தகவல்களை பரப்ப வேண்டாம். இப்பகுதியில் முந்தைய காலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1999-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது அதிகமான தீவிரத்தன்மை காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.