குஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் புலி நடமாட்டம்…!

Read Time:2 Minute, 47 Second

குஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில்தான் ஆசிய சிங்கங்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால் 30 ஆண்டுகளாக புலிகளின் நடமாட்டம் எதுவும் தென்படவில்லை. இந்நிலையில் மாஹிசாகர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியை ஒட்டிய கிராமத்தை சேர்ந்த மக்கள் வனப்பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து புலியின் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை உறுதிசெய்ய அரசு நடவடிக்கையை எடுத்தது. 

வனத்துறை காட்டுப்பகுதியில் ஒவ்வொரு இடத்திலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தியது. தொடர்ந்து நடமாட்டம் எதுவும் இருக்கிறதா என காலடி தடங்களையும் கண்காணித்து வந்தது. 

இந்நிலையில் மக்களின் கூற்றை உண்மையாக்கும் வகையில் புலி நடமாட்டம் காணப்பட்டுள்ளது. வனத்துறை பொருத்திய சிசிடிவி கேமராக்களில் புலியின் புகைப்படம் பதிவாகியுள்ளது. திங்கள் கிழமை இரவு சிசிடிவி கேமராக்களில் புலியின் புகைப்படங்கள் பதிவாகியுள்ளது. புலிக்கு 8 வயது இருக்கலாம் என அம்மாநில வனத்துறை தெரிவிக்கிறது. இறுதியாக குஜரத்தில் கடந்த 1989-ம் ஆண்டு இங்கு வனத்துறை புலி கணக்கெடுப்பு பணியை நடத்திய போது புலி காணப்பட்டது. இப்போது 30 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 குஜராத் மாநில வனத்துறை மந்திரி கண்பத் வசாவா பேசுகையில், புலி காணப்பட்டதை உறுதி செய்துள்ளார். இதற்கிடையே அண்டைய மாநிலங்களில் இருந்து இந்த புலி வந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் குஜராத்துடன் எல்லையை பகிர்ந்துள்ளது.  இப்போது புலி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பை நடத்த உந்துதலாக அமைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 2,226 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக 2010 மற்றும் 2016-ல் எடுக்கப்பட்ட போது முறையே 1,706 மற்றும் 1,411 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.